கோலாலம்பூர்: நாட்டின் ஆயுதப்படைகளை அவமதிப்பவர்களை தேசிய எதிரிகள் என்று தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு வர்ணித்துள்ளார்.
“நமது ஆயுதப்படைகளை அவமதிப்பது அருவருப்புமிக்கது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை கூறினார்.
முன்னதாக, காமுடா பெர்ஹாட் நிறுவனர் கூன் யூ யின், ஒரு வலைப்பதிவு இடுகை மூலமாக நாட்டின் ஆயுதப்படைகளுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.
ஆயுதமேந்திய வீரர்கள் சாப்பிடுவதையும் தூங்குவதையும் தவிர, வேறு எதுவும் செய்ய மாட்டார்கள் என்று அவர் கூறியிருந்தார். பெரும்பாலானவர்கள் இலக்கு பயிற்சிக்கு வெளியே ஒருபோதும் சுடவில்லை என்றும், அதற்கு பதிலாக அவர்கள் பெல்டா தோட்டங்களில் வேலைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
கூன் தனது இடுகைக்கு மன்னிப்பு கோரியிருந்த போதும், இந்த பிரச்சினை மன்னிப்பு பற்றியது அல்ல என்றும், அதை விசாரிக்க காவல் துறையினரிடம் விட்டுவிடுவதாக அமைச்சர் கூறினார்.