Home One Line P1 “48 மணி நேரத்திற்குள் குலசேகரன் மன்னிப்புக் கேட்க வேண்டும்!”- ஜாகிர் நாயக்

“48 மணி நேரத்திற்குள் குலசேகரன் மன்னிப்புக் கேட்க வேண்டும்!”- ஜாகிர் நாயக்

750
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தம்மிடம் மன்னிப்புக் கேட்பதற்கு, மனிதவளத் துறை அமைச்சர் எம்.குலசேகரனுக்கு 48 மணி நேரம் அவகாசத்தை, சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் அளித்துள்ளார்.

அமைச்சரின் அவதூறான அறிக்கையால் ஏற்பட்ட சேதம், சங்கடம், அவமானம் மற்றும் அவமதிப்பு ஆகியவற்றுக்கான தீர்வாக குலசேகரன் ஒரு நியாயமான தொகையையும் வழங்க வேண்டும் என்றும் ஜாகிர் எதிர்பார்க்கிறார்.

நேற்று வெள்ளிக்கிழமை ஜாகிரின் வழக்கறிஞர் அமைச்சரின் அலுவலகத்தில் இந்தக் கோரிக்கைக் கடிதத்தை ஒப்படத்தனர். அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க ஜாகீரின் வழக்கறிஞர்கள் தயாராக உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குலசேகரன் தற்போது உத்தியோகபூர்வ கடமையில் வெளிநாட்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

கிளந்தானில் ஜாகிரின் உரையை விமர்சித்து கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் குலசேகரன் ஜாகீரை அவதூறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியர்கள் இந்தியாவின் பிரதமரை ஆதரிக்கிறார்கள், ஆனால் மலேசியாவின் பிரதமரை ஆதரிக்கவில்லை என்று ஜாகிர் கூறியிருந்தார்.

குலசேகரனின் செய்திக்குறிப்பில், ஜாகிர் இஸ்லாமிய மதத்தை சுயநல நோக்கங்களுக்காக துஷ்பிரயோகம் செய்யும் ஒரு நேர்மையற்ற நபர் என்றும், இந்து மலேசியர்கள் மலேசியாவிற்கு விசுவாசமற்றவர்கள் என்று நேர்மையற்ற முறையில் குற்றம் சாட்டியதாகவும் ஜாகிரின் வழக்கறிஞர் அக்பெர்டின் கூறினார்.