கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது சுமத்தப்பட்ட 1எம்டிபி நிதி கையாடல் தொடர்பான வழக்குகள் சுமார் ஓராண்டுக்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடங்குகின்றது.
1எம்டிபிக்குச் சொந்தமான 2.3 பில்லியன் ரிங்கிட் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பில் நஜிப் 25 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார். நீதிபதி கோலின் செகுயிரா முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.
எனினும் எஸ்ஆர்சி நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கும் இன்னொரு புறம் தொடர்ந்து கொண்டிருப்பதால், நஜிப்பின் வழக்கறிஞர்கள் குழு, இன்றைய வழக்கை ஒத்தி வைக்க கோரிக்கை விடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கைத் தொடர்ந்து நடத்துவதா அல்லது எஸ்ஆர்சி வழக்கை முடித்தபின் நடத்துவதா என்ற முடிவை நீதிபதி கோலின் செகுயிரா இன்று எடுப்பார்.