ஹாங்காங் – அடாது பெய்த கடும் மழை ஒருபுறம் – காவல் துறையின் தடைகள் – சீன அரசாங்கத்தின் எச்சரிக்கைகள் – இப்படியாக அனைத்தையும் மீறி ஆயிரக்கணக்கான ஹாங்காங் மக்கள் தங்களின் வீதிப் போராட்டத்தை இடைவிடாது 11-வது வாரமாக தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதன் மூலம் தங்களின் ஒருமித்த, வலிமையான குரலையும் ஹாங்காங் மக்கள் பதிவு செய்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாபெரும் பேரணியில் அமைதியையும், ஒற்றுமையையும் வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்டன.
ஹாங்காங்கில் குற்றம் இழைத்தவர்களை சீனாவுக்கு நாடு கடத்த அனுமதி வழங்கும் சட்ட மசோதாவுக்கு எதிராகக் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லாம் பதவி விலக வேண்டும், அரசாங்கம் மேலும் ஜனநாயக முறையிலும், மக்களுக்கு கடப்பாடுடனும் நடக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் இந்த ஆர்ப்பாட்டங்கள் காலப் போக்கில் விரிவடைந்தன.
இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் கடும் மழை காரணமாக அனைவரும் கறுப்புக் குடைகளுடன் கலந்து கொள்ள ஆர்ப்பாட்டம் நடந்த இடங்கள் முழுவதும் ஒரே கறுப்புக் குடைகளின் மண்டலமாகக் காட்சியளித்தன.
இன்றைய ஆர்ப்பாட்டங்களில் சுமார் 1.7 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.