கோலாலம்பூர்: பிரதமர் டாக்டர் மகாதீருடன் நம்பிக்கைக் கூட்டணி அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பில் பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், கலந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை பிகேஆர் மறுத்துள்ளது.
கைருடின் அபுஹாசானின் குற்றச்சாட்டு தீய எண்ணத்தில் செய்யப்பட்டதாக பிகேஆர் தகவல் தொடர்பு இயக்குனர் பாஹ்மி பாட்சில் இன்று வியாழக்கிழமை ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
கைருடின் குறிப்பிட்டுள்ள சந்திப்பு, கடந்த 2018 ஆண்டு மே மாதம் அமைச்சரவை அமைப்பதில் நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு என்று பாஹ்மி கூறினார்.
கடந்த ஆண்டு மே 10-ஆம் தேதி, மகாதீர் அப்போதைய பிகேஆர் தலைவர் வான் அசிசா, அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோருடன் அமைச்சரவை அமைப்பது குறித்து விவாதித்தார்.
கைருடின் குறிப்பிட்டுள்ள கூட்டம் நேற்று புதன்கிழமை பிற்பகலில் வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மாலை முதல், பல சமூக ஊடகப் பக்கங்களில் அன்வார் பிரதமருடனான சந்திப்பைத் தவிர்ப்பதாகக் குற்றம் சாட்டத் தொடங்கின.