கோலாலம்பூர்: கத்தார் நாட்டின் முன்னாள் பிரதமர் ஹமாட் ஜாசிம் ஜாபெர் அல் தானியின் மனைவிக்கு பரிசு வழங்குவதற்காக, முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கடந்த 2014-ஆம் ஆகஸ்டில் இத்தாலியில் உள்ள சுவிஸ் நகைக்கடையில் மொத்தமாக 3.2 மில்லியன் ரிங்கிட்டை செலவிட்டதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் விசாரணையின் 57-வது நாளான இன்று, நஜிப்பின் வழக்கறிஞர் பார்ஹான் ரீட் ஒரு கடிதத்தை முன்வைத்தார். அக்கடிதத்தில் ஹமாத்தின் மனைவி நூர் அல்–சுபாய், நஜிப்பின் மனைவி ரோஸ்மா மன்சோருக்கு கடந்த 2014-ஆம் ஆண்டில் பரிசுக்கு நன்றிக் கூறுவதற்காக அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 தேதியிட்ட அக்கடிதம் டி கிரிசோகோனோ நகைக் கடையில், மலேசியாவுக்கு நட்பான ஒரு வெளிநாட்டுத் தலைவருக்கு பரிசு வாங்குவதாக பெரிய அளவில் செலவழித்ததாக நஜிப் புலனாய்வாளர்களிடம் கூறியதாக எம்ஏசிசி விசாரணை அதிகாரி ரோஸ்லி உசேன் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்திய உடனேயே இந்த கடிதம் முன்வைக்கப்பட்டது.
அப்பரிசை வாங்குவதற்கு கடன் பற்று அட்டை பரிவர்த்தனை 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதியன்று செய்யப்பட்டது என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.