கோலாலம்பூர்: பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் இன்றும் (ஆகஸ்டு 23) நாளையும் (ஆகஸ்டு 24) பதற்றம் இருக்கும் என்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் செய்தியை காவல் துறையினர் மறுத்துள்ளனர்.
முஸ்லீம் போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு எதிராகவும், சீனம் மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் அரேபிய வனப்பெழுத்து அறிமுகப்படுத்தப்பட்டது தொடர்பாக இந்தக் கூட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆயினும், இக்கூட்டத்திற்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை என்று முன்னதாக பிரிக்பீல்ட்ஸ் காவல் துறைத் தலைவர் அரிபாய் தாராவெ தெரிவித்திருந்தார்.
“ஆகஸ்டு 23 மற்றும் 24 தேதிகளில், லிட்டில் இந்தியாவில் ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடக்க இருக்கிறது என்று வதந்தியில் உண்மை இல்லை. நிலைமை பாதுகாப்பானது மற்றும் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுபோன்ற போலி செய்திகளுக்கு மக்கள் முக்கித்துவம் தரக்கூடாது.” என்று அரிபாய் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
லிட்டில் இந்தியாவுக்கும், நு சென்ட்ரலுக்கும் இடையிலான பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு ஒரு கலவரம் எதிர்பார்க்கப்படுவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்ற சம்பவம் நாளை சனிக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அது கூறியதுடன், இப்பகுதியைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.