புது டில்லி: இந்தியா காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமாவில் சமீபத்தில் நடந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 வீரர்கள் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜய்ஷ் இ முகமட் என்கிற அமைப்பு பொறுப்பு ஏற்றது. பெரும் துயரை ஏற்படுத்திய இந்த தாக்குதல் சம்பவம் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தது. பல்வேறு தரப்பினர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
புல்வாமா மற்றும் பாலகோட் தாக்குதல் சம்பவங்களை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் புதிய படம் தயாராகிறது. இப்படத்தை விவேக் ஓபராய் தயாரிக்கிறார். படப்பிடிப்பு இவ்வருடம் இறுதியில் தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தான் படையினரால் சிறை பிடிக்கப்பட்ட அபிநந்தன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் தேர்வு தற்போது நடைபெறுகிறது.
“இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு படத்தை எடுக்க எனக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. நமது இராணுவப் படையினரது வீரத்தை போற்ற வேண்டியது ஓர் இந்தியன் என்ற முறையில் எனது கடமை. அபிநந்தன் உள்ளிட்ட நமது வீரர்களின் வீரதீர செயல்கள் இந்த படத்தின் மூலம் வெளிப்படும். பாலகோட் தாக்குதலை இந்திய விமானப்படை திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்தியது” என்று இப்படத்தைப் பற்றி வினவியபோது விவேக் குறிப்பிட்டுள்ளார்.
இப்படம் குறித்து விரிவான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.