கோலாலம்பூர் – தேசிய தினத்தை முன்னிட்டு டிஎச்ஆர் ராகாவில் ‘கலக்கல் காலை’ அறிவிப்பாளர்கள் சுரேஷ் மற்றும் அகிலாவின் 24 நேர ரகளை ஆகஸ்ட் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி தொடங்கி ஆகஸ்ட் 31-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஒலியேறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சுவாரஸ்யமான அங்கங்கள் மற்றும் நேர்காணல்கள் இடம்பெறவுள்ளன. அவ்வகையில் 24 மணி நேரத்திற்கு ஒலியேறும் இந்நிகழ்ச்சியில், 24 விதமான பேச்சு வழக்குகள், மலேசியாவில் மக்கள் அணியும் 24 வகையான ஆடைகள், 24 gotcha (இது எப்படி இருக்கு), ஆபத்தான மாய வித்தையைப் புரிந்து இரண்டாவது முறையாக மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த விக்னேஸ்வரனின் 24 வகையான மாய வித்தைகள் என பல அரிய தகவல்கள் ரசிகர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
அதுமட்டுமின்றி, ராகாவின் கலக்கல் காலை குழுவினர்கள் 24 நேரத்தில் ஒரு குறும்படத்தைத் தயாரிக்கவுள்ளார்கள். அந்தக் காணொளி தேசிய தினத்தன்று ராகாவின் சமூக வலைத் தளங்களில் வெளியிடப்படும்.
அதே வேளையில், ரசிகர்கள் அழைத்து அறிவிப்பாளர்களுடன் கலந்துரையாடும் அங்கங்களும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும்.
மேல் விவரங்களுக்கு ராகாவின் raaga.fm அதிகாரப்பூர்வ அகப்பக்கம் அல்லது முகநூல் மற்றும் ராகாவுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.