கோலாலம்பூர் – நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான சிஐஎம்பி (CIMB Group) வரிக்கு முந்திய இலாபமாக 2019-ஆம் ஆண்டுக்கான முதல் அரையாண்டில் 3.56 பில்லியன் ரிங்கிட்டைப் பதிவு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த வங்கிக் குழுமத்தின் வரிக்குப் பிந்திய நிகர இலாபம் 2.70 பில்லியனாக உயர்ந்திருக்கிறது. இதன் மூலம் அதன் பங்குதாரர்கள் தங்களின் ஒவ்வொரு பங்குக்கும் தலா 14 காசுகள் இலாப ஈவாகப் பெறுவர். 1.36 பில்லியன் ரிங்கிட்டை இலாப ஈவாக சிஐஎம்பி வழங்கும்.
2019-ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் கடன்களுக்கான விழுக்காட்டை உயர்த்துவது, வருமானத்தை அதிகரிப்பது, தனது சொத்துகளை தரமான முறையில் பராமரிப்பது ஆகிய இலக்குகளோடு சிஐஎம்பி செயல்படும் என அந்தக் குழுமம் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளது.