Home One Line P1 முரசு நெடுமாறன் நடத்திய கவிதையின்வழி தமிழ்மொழிக் கற்பித்தல் பட்டறை

முரசு நெடுமாறன் நடத்திய கவிதையின்வழி தமிழ்மொழிக் கற்பித்தல் பட்டறை

1174
0
SHARE
Ad

பட்டவொர்த் – துவாங்கு பைனுன் ஆசிரியர் கல்வி வளாகத் தமிழ் ஆய்வியல் துறை, தமிழ்மொழிக் கழகத்தோடு இணைந்து கற்றல் கற்பித்தலை மேம்படுத்தும் நோக்கில் கவிதைப் பயிலரங்கம் ஒன்றனை மிகச் சிறப்பான முறையில் நடத்தியது. இதனில் 68 தமிழ் ஆய்வியல் துறையைச் சார்ந்த பயிற்சி ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர். கடந்த ஆகஸ்ட் 29 முதல் 30 வரை இரண்டு நாட்களுக்கு இப்பட்டறை நடந்தது.

இந்நிகழ்ச்சியானது தமிழ்கூறும் நல்லுலகில் ‘பாப்பாவின் பாவலர்’ என்று செல்லமாக அழைக்கப்பெறும் முனைவர் முரசு நெடுமாறன் அவர்களால் திறம்பட நடத்தப்பெற்றது.

மலேசிய, சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதைகளை வகுத்தும், தொகுத்தும், ஆய்ந்தும், கவிதைகளின் பின்புலத்தை எழுதி மலேசிய, சிங்கப்பூர்த் தமிழர் வரலாறுகளையும் எழுதிச் சேர்த்தும் 1080 பக்கங்களில் வடிவமைத்து மிக உயரிய பதிப்பாக வெளியீடு கண்ட ‘மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்’ நூலானது இவரது கைவண்ணத்தில் உருவெடுத்த ஓர் அரிய ஆவணம் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

அவ்வகையில், கவிதையின்வழி மாணவர்களுக்குத் தமிழ்மொழி கற்பிக்கும் அணுகுமுறைகள் தொடர்பான – ஆழமான அறிவூட்டலையும் சிந்தனையாற்றலையும் வழங்கும் நோக்கத்தில் இப்பட்டறை நடத்தப்பெற்றது. முதல் நாளான 29 ஆகஸ்ட் 2019 அன்று ‘சி’ © விரிவுரை மண்டபத்தில் இரவு 7.30 மணி முதல் 10.00 மணி வரை ‘கவிதை ஓர் அறிமுகம்’ எனும் தலைப்பில் பட்டறைத் தொடக்கம் கண்டது.

முரசு நெடுமாறன் அவர்கள் மொழிப்பாடத்தில் கவிதையின் முதன்மையையும் பயன்பாட்டையும் தெள்ளத் தெளிவாக விளக்கினார். மேலும் அவர் கிடைத்ததற்கரிய கருத்துகளையும் செய்திகளையும் பயிற்சி ஆசிரியர்களிடம் பகிர்ந்துகொண்டார். மேலும், அனைத்து பயிற்சி ஆசிரியர்களையும் ஈர்க்கும் வண்ணம் பயிலரங்கை உயிர்ப்புடன் நடத்தினார்.

அவர் பயன்படுத்திய  இசைப்பாடல்களும் காணொளிக்காட்சிகளும் பயிற்சி ஆசிரியர்களுக்குப் புதிய அணுகுமுறைகளையும் சிந்தனை விரிவையும் ஏற்படுத்தின. தாம் சொல்ல வந்த கருத்தைப் பயிற்சி ஆசிரியர்களின் மனத்தில் பதியச்செய்வதில் முரசு நெடுமாறன் பெரு வெற்றிகண்டார்.

இரண்டாம் நாளான, ஆகஸ்ட் 30-ஆம் நாளன்று மதியம் 1.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை பணியிடைப்பயிற்சிப் பிரிவு மண்டபத்தில் இப்பட்டறைத் தொடர்ச்சி கண்டது. மதிய உணவிற்குப் பின்னர் விரிவுரையாளர்களும் பயிற்சி ஆசிரியர்களும் மண்டபத்தில் ஒன்றுகூடினர். தொடர்ந்து, தமிழ்மொழி பாடத்தின் புதிய கலைத்திட்டம் (KSSR), தமிழ்மொழி, நன்னெறிக் கல்விப் பாடங்களில் கவிதையின் பயன்பாடு போன்ற அருமையான தலைப்புகளில் விரிவுரைகளும் நடத்தப் பெற்றன.

செய்யுளும் மொழியணியும் எழுதுவிக்கும் போட்டியில் ஆறு பயிற்சி ஆசிரியர்கள் வெற்றிப்பெற்றனர். ஆனந்த ராஜ் முனுசாமி, நிவாசினி முருகன், புகனேஸ்வரி வரதராஜு, ஜெனனி குணசீலன், ஜவீனா டேவிட், கௌசல்யா நாகராஜு ஆகியோர் வெற்றி பெற்றனர். அடுத்ததாக, கடினமான செய்யுள்களையும் மொழியணிகளையும் மாணவர்களுக்குப் புரியும் வகையில் எளிமையாகக் கற்பிக்கும் அணுகுமுறைகளும் விளக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியின் நிறைவு விழா மாலை மணி 4 அளவில் நடைபெற்றது. இந்நிறைவு விழாவில் துவாங்கு பைனுன் ஆசிரியர் கல்வி வளாக மொழித்துறைத் தலைவர் திருவாளர் அப்துல் கமால் பின் அப்துல் கானி, பட்டறை வழிநடத்துனர் முனைவர் முரசு நெடுமாறன், தமிழ் ஆய்வியல் துறைத் தலைவர் திருவாளர் சாமிநாதன் கோவிந்தசாமி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் விரிவுரையாளருமான திருவாளர் சேகரன் முத்தப்பன், தமிழ்மொழிக்கழக ஆலோசகரும் விரிவுரையாளருமான திருவாளர் மணிமாறன் கோவிந்தசாமி, தமிழ்த்துறை விரிவுரைஞர்கள் முனைவர் பாலு சுப்ரமணியம், முனைவர் மணியரசன் முனியாண்டி, டத்தின் அல்லிமாலை சுப்ரமணியம், மாணவர் நல துறை விரிவுரைஞர் திருவாளர் இரவீந்திரன் செல்லையா மற்றும் 68 பயிற்சி ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சி அலுவல்முறையாக துவாங்கு பைனுன் ஆசிரியர் கல்வி வளாக மொழித்துறைத் தலைவர் திருவாளர் அப்துல் கமால் பின் அப்துல் கானி அவர்களால் நிறைவு கண்டது. அவர்தம் உரையில் பயிற்சி ஆசிரியர்கள் பள்ளிக்குச் சென்று பட்டறையில் கற்றுக்கொண்ட அனைத்து திறன்களையும் ஆக்கப்பூர்வமான மாணவர்களை உருவாக்க முறையாகக் கையாள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

இது போன்ற நிகழ்ச்சிகள் மென்மேலும் சிறப்பாக நடைப்பெற வளாக நிர்வாகக் குழு எவ்வேளையிலும் கைக்கொடுக்கும் எனவும் தெரிவித்துக்கொண்டார். சுமார் 5 மணியளவில் புகைப்படப்பிடிப்பு அங்கத்தோடு இந்நிகழ்ச்சி ஒரு நிறைவை அடைந்தது. இந்நிகழ்ச்சியானது பயிற்சி ஆசிரியர்களிடத்தில் ‘இலைமறை காய்போல’ மறைந்திருக்கும் கவிதை இயற்றும் ஆற்றலை வெளிக்கொணர உதவும் களமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

மேலும், நாட்டின் மூத்த கவிஞரான முனைவர் முரசு நெடுமாறன் அவர்களுடன் பொன்னான நேரத்தைக் கழித்து அறிவுக்களஞ்சியத்தைப் பெருக்கிக்கொள்ளும் அரிய வாய்ப்பும் பயிற்சி ஆசிரியர்களுக்குக் கிட்டியது. அதுமட்டுமின்றி, பயிற்சி ஆசிரியர்களுக்குக் கவிதையின்வழி தமிழ்மொழிக் கற்பித்தல் முறைமைகளும் பயிற்சிகளும் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற வழிகோலிய துவான்கு பைனுன் ஆசிரியர் கல்வி வளாக இயக்குநர், மொழித்துறைத் தலைவர், தமிழ் ஆய்வியல் துறைத் தலைவர், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்துறை மற்றும் மற்ற துறை விரிவுரையாளர்கள், தமிழ்மொழிக் கழக செயற்குழு உறுப்பினர்கள், தமிழ் ஆய்வியல் துறைப் பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் இது போன்ற விளைப்பயன்மிக்க அருமையான பட்டறைகளும் கருத்தரங்குகளும் நடைபெறும் என்ற எதிர்ப்பார்ப்பும் ஆவலும் பயிற்சி ஆசிரியர்களிடத்தில் மிகுந்தே காணப்பட்டது.

தகவல் தொகுப்பு உதவி – ஆனந்த ராஜ் முனுசாமி (துவாங்கு பைனுன் கல்லூரி தமிழ் ஆய்வியல் துறை பயிற்சி ஆசிரியர்)