காங்கிரசின் பழம் பெரும் அரசியல்வாதியும், கர்மவீரர் காமராஜரின் சீடராக விளங்கியவருமான குமரி அனந்தனின் மகளான தமிழிசை தனது தந்தையின் சித்தாந்தங்களுக்கு முற்றிலும் எதிர்மறையான சித்தாந்தங்களைக் கொண்ட பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து கட்சியில் படிப்படியான முன்னேறினார்.
ஒரு மருத்துவரான தமிழிசை பாரதிய ஜனதாவின் தமிழகத் தலைவர் பொறுப்பிலிருந்து இனி விலகி விடுவார் என்பதால், அவருக்குப் பதிலாக தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படுபவர் யார் என்ற ஆர்வமும் தமிழக அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
இதற்கிடையில், ஆளுநராக நியமனம் பெற்றுள்ள தமிழிசைக்கு அனைத்து வட்டாரங்களில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன.
தற்போது வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் என பலரும் தமிழிசைக்கு வாழ்த்துகள் தெரிவித்திருக்கின்றனர்.