ஏப்ரல் 5 – “நான் பேராக் மாநிலத்தில் போட்டியிடுகிறேன்” – என்ற அன்வாரின் அறிவிப்பு தான் தற்போது அரசியல் வட்டாரங்களை மிகவும் பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் ஒரு விவாதம்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அன்வார் சிலாங்கூரில் போட்டியிடலாம், ஜோகூரில் போட்டியிடலாம் என்று அரசியல் ஆர்வலர்கள் ஆளுக்கொரு ஆரூடங்களைக் கூறிவந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் நேற்று பேராக் மாநிலத்தில் போட்டியிடப்போவதாக அன்வார் அறிவித்தார்.
ஆனால் தற்போது அனைவரின் மனதிலும் எழுந்திருக்கும் ஒரு கேள்வி, ஏன் அன்வார் தனது சொந்த தொகுதியான பெர்மாத்தாங் பாவை விட்டு பேராக் மாநிலத்தில் போட்டியிடுகிறார்?
ஏற்கனவே அன்வாருக்கு எதிராக அவ்வபோது கருத்துக்களை வெளியிட்டு வந்த தேசிய முன்னணியைச் சேர்ந்த தலைவர்களுக்கு, அன்வார் பேராக் மாநிலத்தில் போட்டியிடுகிறார் என்ற அறிவிப்பு ‘வெறும் வாய்க்கு அவல் கிடைத்த கதையாக’ அமைந்துவிட்டது.
அன்வாருக்கு பெர்மாத்தாங் தொகுதியில் ஆதரவு குறைந்து விட்டது. அந்த தொகுதியில் சமீபத்தில் அவர் நடத்திய கூட்டங்களில் குறைவான மக்களே கலந்து கொள்கின்றனர். அதை பார்த்துத் தான் அன்வார் பேராக் மாநிலத்தில் போட்டியிட முடிவெடுத்திருக்கிறார் என்று கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துவிட்டனர்.
முன்னாள் பிரதமர் மகாதீர் முதல் தற்போதைய பிரதமரான நஜிப் வரை அனைவரும் அன்வார் பெர்மாத்தாங் பாவ் தொகுதியை விட்டு போவது குறித்து கருத்து தெரிவித்துவிட்டனர்.
நேற்று இது குறித்து கருத்துரைத்த நஜிப் ஆதரவில்லாத காரணத்தால்தான் அன்வார் தொகுதி மாறுகின்றார் என்றும் தன்னைப் பொறுத்தவரை தனது அரசியல் வாழ்வு தனது பாராம்பரிய தொகுதியான பெக்கான் தொகுதியோடு பின்னிப் பிணைந்தே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
அன்வார் பேராக் மாநிலத்தில் போட்டியிடும் சூட்சமம் என்ன?
கடந்த பொதுத் தேர்தலில், பி.கே.ஆர் கட்சி பேராக் மாநிலத்தில் 12 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
இருப்பினும் பெரும்பான்மை சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றிய காரணத்தால் மக்கள் கூட்டணி பேராக் மாநிலத்தில் ஆட்சியை அமைத்தது.
ஆனால் அதன் பிறகு நடந்த உட்கட்சிப் பூசல்களில், மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாற தேசிய முன்னணி பேராக் மாநிலத்தை மீண்டும் வலுக்கட்டாயமாக கைப்பற்றியது.
மீண்டும் தேசிய முன்னணியின் வசம் சென்ற பேராக் மாநிலத்தைக் கைப்பற்றவும், தேசிய முன்னணியிடமிருந்து மீட்கும் நோக்கத்தோடும், அன்வார் பேராக்கை நோக்கி நகர்வதாக ஒரு தரப்பு கூறுகிறது.
பேராக் மாநிலத்தை மீண்டும் கைப்பற்றினால் அங்கு ஆட்சி அமைக்க உறுதியான தலைமைத்துவம் தேவைப்படுகின்றது.
அத்தகைய ஒரு தலைமைத்துவம் மலாய்க்கார தலைமைத்துவமாகத்தான் இருக்க வேண்டும் என்பது கடந்த பொதுத் தேர்தலில் நிரூபிக்கப்பட்ட ஒன்று.
காரணம் சீனர் ஒருவரை மந்திரி பெசாராக நியமிக்க மக்கள் கூட்டணியும், ஜசெகவும் செய்த முயற்சிகள் பேராக் அரண்மனையினால் தடுக்கப்பட்டதாக அந்த சமயத்தில் தகவல்கள் வெளிவந்தன.
அதனால் பாசீர் பாஞ்சாங் என்ற ஒரே ஒரு சட்டமன்றத்தை பாஸ் கட்சியின் சார்பாக வென்றிருந்த முகமட் நிசார் ஜமாலுடின் பேராக் சுல்தான் ஒப்புதலுடன் மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகு வலுக்கட்டாயமாக நடந்தேறிய ஆட்சி மாற்ற காட்சிகளில் பேராக் அரண்மனை முக்கிய பங்காற்றியதை மலேசியர்கள் குறிப்பாக பேராக் மாநில மக்கள் அவ்வளவு சுலபமாக மறந்து விட மாட்டார்கள்.
எனவே, மீண்டும் பேராக் மாநிலத்தை கைப்பற்றி மக்களின் ஆதரவு எங்கள் பக்கம் தான் என்பதை நிரூபித்துக் காட்ட ஒரு பலமான தலைமைத்துவம் இன்றைக்கு பேராக் மாநிலத்திற்கு தேவைப்படுகின்றது.
அதற்காகத்தான் அன்வார் பேராக் மாநிலம் செல்கின்றார் என்ற அரசியல் கண்ணோட்டத்தையும் சிலர் கொண்டிருக்கின்றனர்.
பேராக் மாநிலத்தின் ஈப்போ தீமோர் தொகுதியிலிருந்து லிம் கிட் சியாங் தொகுதி மாறி, இந்த முறை அரசியல் சுனாமியை ஜோகூர் மாநிலத்திலிருந்து உருவாக்குவதற்காக கேலாங் பாத்தா தொகுதியில் போட்டியிடுவதால் பேராக் மாநிலத்தில் மக்கள் கூட்டணிக்கு இன்றைய சூழ்நிலையில் வலுவானதொரு தலைமைத்துவம் தேவைப்படுகின்றது.
மத்தியில் ஆட்சி அமைக்க தொகுதி மாறுவது அவசியம்
ஆனால் இன்னொரு தரப்பு கூறுவது என்னவென்றால், அன்வார் தனது சொந்தத் தொகுதியான பெர்மாத்தாங் பாவில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவார்.
ஆனால் இன்றைய சூழ்நிலையில் அது முக்கியமல்ல. மாறாக, புத்ரா ஜெயாவைக் கைப்பற்றி மத்தியில் ஆட்சி அமைப்பதுதான் அன்வாரின் இலக்கு.
எனவே, வேறு யாரையாவது பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் நிறுத்தி அந்த தொகுதியை வெற்றி கொள்ளும் அதே தருணம், தேசிய முன்னணிக்கு சாதகமான ஒரு தொகுதியில் அன்வார் போன்றவர்கள் போட்டியிட்டார் குறைந்த வாக்கு வித்தியாசத்திலாவது வென்று விடுவார்கள்.
அதனால் கூடுதல் நாடாளுமன்ற தொகுதிகளை வெல்ல முடியும் என்பதோடு, மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றும் முயற்சிகளும் எளிதாகும் என்ற கணக்கோடுதான் அன்வார் பேராக் மாநிலத்தில் களம் இறங்குகின்றார்.
எனவே, ஏற்கனவே தங்கள் வசமிருக்கும் தொகுதிகளில் போட்டியிட்டு எளிதாய் வெற்றியடைவதை விட, பேராக் மாநிலத்தில் கடினமான தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றியடைவதன் மூலம் மக்கள் கூட்டணி மத்தியின் ஆட்சியைப் பிடிக்கலாம், தானும் பிரதமராகலாம் என்ற பெரிய இலக்கோடு அன்வார் காய் நகர்த்துவது தெளிவாகத் தெரிகின்றது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் அன்வார் பேராக் மாநிலத்தில் போட்டியிடுகிறார் என்று தெரிந்ததும், இதுவரை அம்மாநில பி.கே.ஆர் மற்றும் பாஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மட்டுமே அன்வாரின் முடிவை வரவேற்றுள்ளனர்.
ஜ.செ.க சார்பாக இதுவரை யாரும் வாய் திறக்கவில்லை. காரணம், அன்வார் ஜசெகவின் தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடுவார் என்ற யூகமும் நிலவி வருகின்றது.
எனவே அன்வாருக்காக பேராக்கில் யார் தங்கள் தொகுதியை விட்டுக்கொடுக்கப் போகிறார்கள் என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது.
அன்வார் பேராக்கில் வெற்றிபெறும் வாய்ப்பு இருக்கிறதா?
அன்வார் பேராக் மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டுமானால் மிகுந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும்.
இதற்குத் தயாராக தேசிய முன்னணியும் தங்கள் வலிமையை ஒன்று திரட்டி ஒருமுகப்படுத்தி வருகிறது.
பேராக் மாநிலத்தின் மந்திரி பெசாரான டத்தோஸ்ரீ ஸாம்பிரி அப்துல் காதீர், “அன்வார் பேராக்கில் போட்டியிடுவதால் எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அன்வாரை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
பேராக் மாநில அம்னோ தலைவரான முகம்மட் சாஹிட் ஹமிடி, ஸாம்பிரி கூறியதை விட ஒரு படி மேலே போய், “அன்வார் பேராக் வந்தால் அவரைப் ‘புதைத்து விடுவேன்’ என்று நேரடியாகவே சவால் விடுத்துள்ளார்.
எனவே இந்த சவால்களை எல்லாம் முறியடித்து அன்வார் பேராக்கில் நின்று வெற்றி பெறுவாரா? இல்லையா என்பதுதான் தற்போது அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் கேள்வி.
– பீனிக்ஸ்தாசன்