கோலாலம்பூர் – நாளை தொடங்கும் யுபிஎஸ்ஆர் தேர்வுகளை எழுதவிருக்கும் தமிழ்ப்பள்ளி மற்றும் தேசிய ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் அனைத்து இந்திய மாணவர்களும் சிறந்த முறையில் தேர்வு எழுத வேண்டுமென மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
“கல்வி ஒன்றே ஒருவரின் வாழ்க்கையை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும். இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான், மஇகா இந்திய மாணவர்களின் கல்வி விவகாரங்களில் முக்கியப் பங்காற்றி வருகிறது. கடந்த காலங்களில் 170 மாணவர்களே சிறந்த தேர்ச்சிப் பெற்ற இந்திய மாணவர்களாக இருந்தனர். ஆனால், எம்ஐஇடியின் வழி வழங்கப்பட்ட பயிற்சிப் புத்தகங்களின் வழியாகவும், மாணவர்கள் ஊக்கமுடன் தேர்வு எழுத வேண்டுமென்ற நோக்கத்தில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி வந்ததன் வழியாகவும், இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் படிப்படியாக உயர்ந்து தற்போது சுமார் 2000 மாணவர்களுக்கும் மேல் சிறப்புத் தேர்ச்சி பெற்று வருகின்றனர். அதேவேளையில், சிறந்த பள்ளியாக விளங்கும் பள்ளிகளுக்கும் ஊக்கத் தொகையும், பாராட்டுப் பத்திரங்களும் வழங்கப்படுகின்றன” என விக்னேஸ்வரன் இன்று விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
எனவே, இவ்வாண்டு இந்த யூபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் சிறந்த முறையில் தேர்வு எழுத வேண்டும் என்றும், அவர்கள் சிறந்த வெற்றியினைப் பெற வேண்டுமென்றும் நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான விக்னேஸ்வரன் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.