ஹாங்காங் – கடந்த மூன்று மாதங்களாக ஹாங்காங்கை உலுக்கி வரும் ஜனநாயகப் போராட்டங்களுக்குக் காரணமாக அமைந்த அந்நாட்டின் சர்ச்சைக்குரிய நாடு கடத்தும் சட்டத்தை ஹாங்காங் அரசு மீட்டுக் கொண்டுள்ளதாக கேரி லாம் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளார். ஹாங்காங்கில் குற்றம் இழைப்பவர்களை சீனாவுக்கு நாடு கடத்த வழிகோலும் இந்த சட்டத்தின் அமுலாக்கம்தான் மக்களின் எதிர்ப்புப் போராட்டங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் காரணமாக அமைந்தது.
அதைத் தொடர்ந்து ஹாங்காங் அரசின் தலைவர் கேரி லாம் பதவி விலக வேண்டும் என்ற அறைகூவல்களும் எழுந்துள்ளன. எனினும் தற்போது முதல் கட்டமாக சர்ச்சைக்குரிய அந்த நாடு கடத்தும் சட்டத்தை அரசாங்கம் மீட்டுக் கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களையும், வன்முறைகளையும் கைவிட்டு விட்டு அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட வருமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கேரி லாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“மோதல்களைத் தவிர்த்து அவற்றுக்குப் பதிலாக பேச்சுவார்த்தைகளுக்கு இடமளித்து, தீர்வுகளைக் காண்போம்” என்றும் காணொளி வழி விடுத்த அறிக்கையில் கேரி லாம் கூறியுள்ளார்.
இதற்கு முன் சர்ச்சைக்குரிய அந்த சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே கேரி லாம் கூறி வந்தார். ஆனால் தற்போது முதன் முறையாக அந்தச் சட்டத்தை நிரந்தரமாக மீட்டுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.