கோலாலம்பூர்: பூமிபுத்ரா தயாரிப்புகளை வாங்குவது மட்டுமல்லாமல், மலேசிய தயாரித்த பொருட்களை ஒட்டுமொத்தமாக வாங்குவதற்கான பிரச்சாரத்தையும் தொடங்குமாறு பொதுமக்களுக்கு உள்நாட்டு வணிகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அதன் அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறுகையில், பல இன சமூகம் கொண்ட ஒரு நாடு என்ற வகையில், மேலும் இணக்கமான வாழ்க்கையை உருவாக்கும் முயற்சியில், மலேசியா தயாரித்த பொருட்களை வாங்கும் பிரச்சாரத்தை அனைத்து தரப்பினரும் ஆதரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
“நம் நாட்டின் சூழலில் மலேசியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதற்கு நாம் ஈடுபாடு காட்ட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆகவே, பல இன மக்களைக் கொண்ட நம் நாட்டில் இணக்கமான மற்றும் வளமான வாழ்க்கையை அடையதில் நாம் ஒற்றுமையாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அண்மையில், பூமிபுத்ரா அல்லாத தயாரிப்புகளை புறக்கணிக்கவும், பூமிபுத்ரா தயாரிப்புகளை வாங்கவும் சில தரப்பினரால் சமூக ஊடகங்களில் பிரச்சாரங்கள் நடந்தப்பட்டன.
பூமிபுத்ரா அல்லாத தயாரிப்புகளை புறக்கணிப்பதற்கான நடவடிக்கையை மறுத்த சிலரின் நடவடிக்கைகள் குறித்து கேட்டதற்கு, இது முஸ்லீம் தயாரிப்புகளுக்கு ஆதரவான நடவடிக்கை என்று அவர்கள் கூறினாலும், அவர்களின் நோக்கம் அப்படியேதான் உள்ளது என்று சைபுடின் கூறினார்.