கோலாலம்பூர் – மலேசியர்கள் எனும் உணர்வை மனதில் விதைத்து ஒற்றுமையாய் இருக்க அனைவரும் வழிவகை செய்ய வேண்டும் என்று மலேசிய தின வாழ்த்து செய்தியில் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நாட்டில் மூவின மக்களும் இணைந்ததன் விளைவாகவே அப்போதைய மலாயா, பிற்காலத்தில் மலேசியா ஆனது. நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தர ஒவ்வொரு இனத்தின் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்ததன் விளைவாகவே மலேசியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. ஆகையால் , அனைவரும் மலேசியர்கள் என்ற உணர்வை மனதில் பதிக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
மலேசியக் குடிமக்கள் அனைவரும் தற்போது ஒற்றுமையாய் வாழ்ந்து வருகின்றனர். நமது முந்தைய சமுதாய பிரதிநிதிகள் கட்டிக் காத்த இன ஒற்றுமை சிறிதும் பிசகாமல் இருக்க நாம் அனைவரும் அதற்கு தொடர்ந்து உயிர் கொடுக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
கடந்த 1963-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் நாள் மெர்டேக்கா சதுக்கத்தில் தேசத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் ‘புதிய மலேசியா’வைப் பிரகடனப்படுத்தினார். அந்த அடிப்படையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 16-ஆம் நாள் மலேசிய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒன்றுபட்ட மலேசியாவின் பெருமையை உலகிற்கு உணர்த்திய அந்த நாளை இந்நாள் இளைஞர்கள் கடைப்பிடித்து வருவது போற்றத்தக்கது என்று சொன்ன நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான விக்னேஸ்வரன் அனைவருக்கும் மலேசிய தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.