கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் போன்ற பிரச்சனையாக உள்ளவர்களை வெறுமனே மலேசியாவை விட்டு வெளியேற்றுவது சரியானதாக இருக்காது என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
“இன உணர்வுகள் இப்போது முன்பை விட மிகவும் வலுவானவையாகி உள்ளது. எந்த காரணத்திற்காகவும், யாரோ ஒருவர் வந்து அவர்களின் சிந்தனையை எதிரொலிக்கும் ஒன்றைச் சொல்லும்போது, அவர்களுக்குப் அது புரியவில்லை என்றாலும், அவர்கள் அதனை ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் ஜாகிரை ஒரு சிறந்த போராளி என்று கருதுகிறார்கள்.”
“நாங்கள் அவருக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், நாங்கள் அந்தக் குழுவிற்கு எதிராக செல்லப் போகிறோம் என்று அர்த்தப்படுகிறது. மலேசியாவில், நீங்கள் இதை எவ்வாறு கையாள்வது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் இது ஒரு எளிய பிரச்சனை அல்ல, இது ஒரு சிக்கலானது.” என்று மகாதீர் இன்று செவ்வாய்க்கிழமை வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கருத்துரைத்தார்.
மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறுவதற்காக ஜாகிர் நாயக் மற்றும் இனம் மற்றும் மதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு முஸ்லிம் குழு ஜி25 நம்பிக்கைக் கூட்டணி அரசைக் கேட்டுக் கொண்டது.
மலேசியாவில் ஜாகிருக்கு நிரந்தர குடியுரிமையை அனுமதித்தது நம்பிக்கைக் கூட்டணி அரசு அல்ல, முந்தைய தேசிய முன்னணி நிருவாகம் என்று மகாதீர் கூறினார்.
சீன இனத்தை திரும்பிச் செல்லக் கோரியதன் தொடர்பிலும், மலேசிய இந்தியர்களின் விசுவாசத்தை கேள்விக்குட்படுத்தியது தொடர்பிலும் ஜாகிர் கடுமையான எதிர்ப்புக்கு ஆளானார்.
ஜாகிரை அவர்களிடம் திருப்பித் தர வேண்டும் என்ற இந்தியாவின் முன்மொழிவு குறித்து கேள்வி எழுப்பியபோது, இதை இந்தியா வலியுறுத்தவில்லை என்று மகாதீர் கூறினார்.
“நான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தேன், அவர் இந்த ஜாகிரை திரும்பப் பெற விரும்புகிறார் என்று என்னிடம் சொல்லவில்லை. ஜாகிர் இந்தியாவுக்கும் தொந்தரவாக இருக்கக்கூடும்” என்று அவர் கூறினார்.