Home One Line P1 ஆப்பிள் கருவிகளில் இனி அனைத்து இந்திய மொழிகளையும் படிக்கலாம் – எழுதலாம்!

ஆப்பிள் கருவிகளில் இனி அனைத்து இந்திய மொழிகளையும் படிக்கலாம் – எழுதலாம்!

1400
0
SHARE
Ad

கடந்த சூன் மாதத்தில் நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்கள் மாநாட்டில், ஐபோன், ஐபேட் கருவிகளுக்கும், மெக் கணினிகளுக்கும் புதிய இயங்குதளங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

ஆப்பிள் கையடக்கக் கருவிகளான ஐபோன், ஐபேட்களுக்காக மேம்படுத்தப்பட்ட அடுத்த கட்ட இயங்கு தளமான ஐ.ஓ.எசின் 13ஆம் பதிகை, கடந்த செப்டம்பர் 19ஆம் நாள், உலகம் எங்கும் உள்ள பயனர்களுக்காக வெளியீடு கண்டது. மரபுக்கு மாறாக, இதன் அடுத்தக் கட்டப் பதிப்பான ஐ.ஓ.எசின் 13.1ஆம் பதிகை இன்னும் சில நாட்களில் பொதுப்பயனீட்டிற்கு வெளியீடு காண இருக்கிறது.

இதுவரை ஐபோன்களுக்கும் ஐபேட்களுக்கும் ஒரே தளமாக இயங்கிவந்த ஐ.ஓ.எஸ்., ஐபேட் கருவிகளுக்குரிய சிறப்புக் கூறுகளைக் கொண்டு ‘ஐ.பேட்.ஓஎஸ்’ என்னும் புதிய பெயரை இந்தத் தட்டைகளுக்காகப் (tablets) பெற்றுள்ளது.

#TamilSchoolmychoice

ஆப்பிள் திறன்கடிகாரங்களுக்கான வாச்-ஓ.எசின் 6ஆம் பதிகையும் கடந்த 19ஆம் நாள் வெளியிடப்பட்டது. மெக் கணினிகளைப் பயன்படுத்துவோர், வரும் அக்டோபரில் தங்களின் இயங்குதளங்களை, கெத்தலீனா என்றழைக்கப்படும் 10.15ஆம் பதிகைக்கு மேம்படுத்திக் கொள்ளலாம்.

ஆப்பிள் பயனர்களின் கருவிகளில் வலம் வரப் போகும் இந்தப் புதிய இயங்குதளங்களில் ஏராளமான புதுமைகள் புகுத்தப்பட்டிருக்கின்றன. இந்தப் புதுமைகளோடு, தமிழ் உள்ளிட்ட, இந்தியாவின் அனைத்து 22 அலுவல்முறை மொழிகளுக்குமான எழுத்துருக்களும், விசைப்பலகைகளும் சேர்க்கப்பட்டுள்ளன என்பது இந்திய மொழிகளுக்கு வாய்த்திருக்கும் அடுத்த கட்டத் தொழில்நுட்பப் பாய்ச்சலாகக் கருதப்படுகிறது.

முதன் முதலாக ஐ.ஓ.எசின் 4ஆம் பதிப்பில், அதிக புழக்கத்தில் உள்ள 10 இந்திய மொழிகளுக்காக, மலேசியக் கணினி நிபுணர் முத்து நெடுமாறன் உருவாக்கிய எழுத்துருக்களை ஆப்பிள் வழங்கியது. அதைத் தொடர்ந்தே கூகுளும் புதிய மென்பொருள்களின் உள்ளடக்கங்களில் இந்திய மொழிகளைப் புகுத்தத் தொடங்கியது.

வரவிருக்கும் புதிய இயங்குதளங்களில், அனைத்து 22 இந்திய மொழிகளுக்கான கூடுதல் எழுத்துருக்களையும் அதற்கான விசைமுகங்களையும் ஆப்பிள் சேர்த்துள்ளது.

விசைமுகங்கள்

தமிழ் உள்ளீட்டிற்கு அஞ்சல், தமிழ்-99 விசைமுகங்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இதுவரை விசைமுகங்கள் இல்லாத கொங்கனி, மணிப்புரி, சாந்தாலி போன்ற மொழிகளையும் உள்ளிடுவதற்குப் புதிய விசைமுகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தி மொழி உள்ளிடுவதற்குப் பரிந்துரைப் பட்டியலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதி ஏற்கனவே தமிழுக்குச் செல்லினத்தின் வழி கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

தமிழோடு மணிப்புரி, சாந்தாலி, காஷ்மீரி, ஒடியா மொழிகளுக்கான விசைமுகப் பட்டியல்

கூடுதல் எழுத்துருக்கள்

எல்லா மொழிகளுக்கும் கூடுதல் எழுத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இணையத் தளங்களை உலாவியின் வழிப் படிக்கும் போது, பயனர்கள் விரும்பும் எழுத்துருக்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். தமிழ் தளங்களுக்கு, முத்து நெடுமாறன் உருவாக்கிய தமிழ் எம்.என் எழுத்துருவே தொடர்ந்து இயல்பான எழுத்துருவாக (default font) அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் விக்கிபீடியா பக்கத்தைப் படிக்க உதவும் தமிழ் எழுத்துருக்கள். தமிழ் சங்கம் எம்.என், தமிழ் எம்.என், இணைமதி ஆகியவை முத்து நெடுமாறனால் உருவாக்கப்பட்டவை. இவற்றைத் தவிர இரண்டு கூடுதல் எழுத்துருக்கள் சேர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

மலையாள விக்கிபீடியா பக்கத்தைப் படிக்க உதவும் முத்து நெடுமாறனின் மலையாள எழுத்துருக்கள்

கணினிகளில், இயங்குதளத்தில் உள்ள எழுத்துருக்களைத் தவிர, பயனர்கள் விரும்பும் எழுத்துருக்களைத் தாங்களாகவே சேர்த்துக்கொள்ளும் வசதி தொடக்க காலத்தில் இருந்தே இருந்து வந்துள்ளது. கையடக்கக் கருவிகளில் இந்த வசதி இல்லாமல் இருந்தது. கடந்த சில பதிகைகளுக்குமுன் ஆப்பிள் இந்த வசதியை ஐ.ஓ.எசிலும் சேர்த்திருந்தது. ஆனால், அதன் பயன்பாடு விரிவடையவில்லை.

ஐ.ஓ.எசின் 13ஆம் பதிகையில், மிக எளிய முறையில் புதிய எழுத்துருக்களைச் சேர்க்கும் வாய்ப்பினை ஆப்பிள் வழங்கி உள்ளது. பாதுகாப்புக் காரணமாக சிற்சிறு தடைகள் ஆங்காங்கே இருந்தாலும், சிரமமற்ற பயன்பாட்டினை ஆப்பிள் உறுதி செய்துள்ளது. இதன்வழி, இனி கையடக்கக் கருவிகளில் எழுதப்படும் ஆவணங்களிலும் பலவகையான எழுத்துருக்களைப் பயன்படுத்தலாம்.

இந்திய ஆங்கிலம் பேசும் சீரி

இந்தியாவில் பேசப்படும் ஆங்கிலத்திற்கும் மற்ற நாடுகளில் பேசப்படும் ஆங்கிலத்திற்கும் சிற்சிறு வேறுபாடுகள் உள்ளன. உச்சரிப்பு முறை மட்டும் இன்றி சொல்லாட்சியிலும் வேறுபாடுகள் உள்ளன. ஆப்பிளின் புதிய இயங்குதளங்களில் இந்திய ஆங்கிலம் பேசும் சீரி, அதற்கேற்ற உச்சரிப்பு முறைகளையும் சொல்லாட்சியையும் பயன்படுத்தும். அதோடு மட்டுமல்லாமல், ஆணுக்கும் பெண்ணுக்குமான இரு குரல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஐ.ஓ.எசும் சீரியும் இன்னும் தமிழ் பேசவில்லை!

ஐ.ஓ.எசின் இடைமுக மொழியாகத் தேர்வு செய்ய பல மொழிகள் இருந்தாலும், இந்திய மொழிகளுள் இந்தி மட்டுமே தொடர்ந்து இருந்து வருவது தமிழ் பேசுவோருக்குப் பெரும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தருகிறது. அதுபோலவே சீரி இதுவரைப் புரிந்து கொள்ளும் ஒரே இந்திய மொழியாக இந்தி மட்டுமே இருந்து வருகிறது.

ஐபோன், ஐபேட் போன்ற திறன்கருவிகளை வாங்குபவர்கள் பெரும்பாலும் ஆங்கிலம் அறிந்தவர்களாக இருந்தாலும், தமிழிலேயே தங்களது திறன்கருவிகளை இயக்க விரும்புகிறவர்களும் இந்தியாவில் மட்டும் அல்லாது மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் புதிய இயங்குதளங்கள் வெளிவரும்போது, இதிலாவது தமிழ் இடைமுகமும் சீரியின் தமிழ்க் குரலும் இருக்குமா என்ற கேள்வி பல நாடுகளில் வாழும் தமிழர்களிடையே எழுந்து கொண்டுதான் வருகிறது.

கேள்விகள் ஆப்பிளுக்குச் சென்றுகொண்டே இருக்கவேண்டும்!

இந்தக் கேள்விகள் ஆப்பிள் நிறுவனத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டும். அல்லது டிவிட்டர், முகநூல் போன்ற நட்பூடகங்களின் வழி வெளிபடுத்தப்பட வேண்டும். தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிப்படுத்துவதே சிறப்பு – பிழையான இயந்திர மொழிபெயர்ப்புகளை இதன்வழித் தவிர்க்கலாம்.

இந்திய மொழிகளின்பால் அக்கறை செலுத்திவரும் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவுக்கு வெளியே அரியணையில் இருக்கும் இந்திய மொழியான தமிழையும் முதன்மை மொழிகளுள் ஒன்றாகச் சேர்க்கும் காலம் கனியும் என்று எதிர்பார்போம் – கனியும் வரைக் கதவைத் தட்டிக்கொண்டே இருப்போம்!

-செல்லினம்