கோலாலம்பூர் – மலேசியாவில், நாம் பன்முகக் கலாச்சாரம் கொண்டவர் என்றும் பன்மொழி பேசுபவர் என்றும் பெருமையுடன் நினைக்கிறோம். “Wei, macha, you want to makan here or tapau balik ?” என்ற புகழ்பெற்ற மும்மொழி வாக்கியத்தை யார் கேட்டதில்லை அல்லது பேசியதில்லை?
ஆனால், உங்களுக்குத் தெரியுமா? மலேசியாவில் 133 மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன என்பது?
அந்த 133 மொழிகளில் கிட்டத்தட்ட 80% பழங்குடி மொழிகள் என்றும் தீபகற்ப மலேசியாவில் உள்ள பழங்குடி மக்கள் காட்டாக, ஜஹாய், ஜாகுத், ஜாகுன், செமாய், மாமேரி, தெமியர், தெமுவான் போன்றவரும், சபாவில், கடாசன், துசுன், பஜாவ், முருத் போன்றோரும் சரவாக்கில் இபான், பிடாயு,மெலனாவ் போன்ற பழங்குடி சமூகங்கள் பேசுகின்றனர் என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது.
மொழி மொழியியல் புலப் பேராசிரியர் டாக்டர் ஸ்டெப்னி பிள்ளை, “, மலேசியாவில் இந்த மொழிகளின் தொடர்ச்சி அபாயத்தில் உள்ளது” என்று கூறுகிறார். 80% உள்நாட்டு மொழிகள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதில் தோல்வி அடைவதால் அம்மொழிகள் சிக்கலை எதிர்க்கொள்கின்றன. மேலும் கவலையளிக்ககூடிய செய்தி என்னவென்றால், சுமார் 8 பழங்குடி மொழிகள் விரைவில் முற்றிலுமாக மறைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது,
காரணம் ஒரு சில வயதானவர்கள் மட்டுமே அம்மொழியைப் பேசுகிறார்கள். “ஒரு மொழியின் இழப்பு கடுமையான தாக்கங்களைக் கொண்டிருக்கிறது, ஏனெனில் பூர்வீக அறிவும் கலாச்சாரமும் மொழியுடன் இழக்கப்படலாம், மேலும், மக்கள் அவர்கள் யார், அவர்களின் கலாச்சார அடையாளம் போன்ற உணர்வையும் இழக்கக்கூடும்,” என்றும் பேராசிரியர் டாக்டர் ஸ்டெப்னி பிள்ளை கருத்துரைத்தார்.
இந்த விழிப்புணர்வை மலேசிய பொதுமக்களுக்குப் பரப்புவதற்கான முயற்சியாக, 2019 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் பன்னாட்டு பழங்குடி மொழிகள் அமைப்புடன் இணைந்து மலாயா பல்கலைக்கழகத்தின் மொழி மொழியியல் புலமும் மலேசிய உள்நாட்டு மொழிகள் ஆய்வு மையமும் சேர்ந்து மலேசியாவின் பழங்குடி மொழிகளின் கண்காட்சியினை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்தக் கண்காட்சி ஒரு சிறப்பான பயன்தரும் நிகழ்வாக இருக்கும். இதில் பட்டறைகள், கண்காட்சிகள், உரையாடல்கள், பழங்குடி இசை, ஓவியங்கள்,கைவினை பொருட்கள் போன்றவை பார்வையாளருக்காக ஏற்பாடு செயயப்பட்டிருக்கின்றது. அதோடுமட்டுமல்லாமல், மலேசியாவின் சில பழங்குடி மொழிகள் பற்றிய தகவல்களும் உள்ளன. மேலும், பழங்குடிகளின் வாழ்க்கையைப் பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொள்ளும் பல்வேறு பழங்குடிச் சமூகங்களைச் சேர்ந்த பல பேச்சாளர்கள் இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்கின்றார்கள்.
சே வோங், ஜாகுத், ஜக்குன், கென்சியு மஹ் மேரி, செமாய், செமலை, தெமியர் சமூகங்களைச் சேர்ந்த பேச்சாளர்களின் வீடியோ பதிவுகளைக் கேட்பதற்கும் அவர்களின் மொழிகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கும் இந்தத் தனித்துவமான நிகழ்ச்சிக்கு மலேசிய மக்கள் அழைக்கப்படுகின்றார்கள். ‘சருகு மானும் முதலையும்’ என்ற கதையின் அசைவூட்ட காணொளிகளைப் பழங்குடிக் குடிகளின் மொழிகளில் பார்க்கும் வாய்ப்பும் உள்ளது. மலேசியாவில் உள்ள பழங்குடி சமூகங்கள் தொடர்பான ஆராய்ச்சியின் சுவரொட்டியும் கண்காட்சியும் இருக்கும்.
இந்தக் கண்காட்சியின் விவரங்கள் பின்வருமாறு:
திகதி: 17 செப்டம்பர் 2019 முதல் 13 அக்டோபர் 2019 வரை
இடம்: மலேசிய உள்நாட்டு மொழிகள் ஆராய்ச்சி நடுவம்
( The Centre for Malaysian Indigenous Studies )
எண் 11, ஜாலான் 16/4 செக்சன் 16, 59100, கோலாலம்பூர்
வழித்தடம்: https://goo.gl/maps/5KkMtpRxt3B2
கண்காட்சியின் போது நடைபெறும் சிறப்பு நிகழ்வுகள் குறித்த புதுப்பிப்புகளுக்கு மலேசிய உள்நாட்டு மொழிகள் ஆராய்ச்சி மைய முக நூலில் காணலாம்.
மேல் விவரங்களுக்கு onnsang_yap@siswa.um.edu.my என்ற முகவரிக்குத் தொடர்புக் கொள்ளுங்கள்.