Home நாடு “பூர்வகுடி மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு” – வேதமூர்த்தி

“பூர்வகுடி மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு” – வேதமூர்த்தி

572
0
SHARE
Ad
பூர்வ குடி மக்களுடன் வேதமூர்த்தி – கோப்புப் படம்

கோலாலம்பூர்: கிளந்தான் மாநில பூர்வகுடி மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நட-வடிக்கையை முன்னெடுக்க மத்திய கூட்டரசாங்கத்திற்கு சட்ட ரீதியான முகாந்திரம் இல்லையென்று மேல்முறையீட்டு நீதிமன்றம் எடுத்துள்ள முடிவின் தொடர்பில் தேசிய சட்டத்துறை தலைவர் (அட்டர்னி ஜெனரல்) இட்ருஸ் ஹரூண் சீராய்வு முறையீடு செய்ய வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி (எம்ஏபி) தலைவரும் பூர்வகுடி மக்களுக்கான முன்னாள் அமைச்சரவைப் பொறுப்பாளருமான செனட்டர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

குவா மூசாங் அஸ்லி மக்கள் குடியேற்றப் பகுதியில் வெட்டு மர நடவடிக்கை மேற்கொள்வதற்காக ஒரு சில நிறுவனங்களுக்கு கிளந்தான் மாநில அரசு அனுமதி வழங்கியதன் தொடர்பிலும் அந்த இடத்தில் நடைபெற்ற அத்துமீறல் குறித்தும் அம்மாநில அரசுக்கு எதிராக புத்ராஜெயா சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மேல்முறையீட்டு நிதிமன்றம் கடந்த வியாழக்கிழமை ஜூன் 3-இல் மேற்கண்ட தீர்ப்பை வழங்கியது.

“மலேசிய வரலாற்றில் பூர்வகுடி மக்களுக்காக மத்திய அரசு மேற்கொண்ட முதல் சட்ட நடவடிக்கை இதுவாகும். அதுவும் தான் அமைச்சராக இருந்த காலத்தில் தன்னுடைய பரிந்துரையின் அடிப்படையில் அப்போதைய சட்டத்துறைத் தலைவர் தோமி தோமஸ் மூலம் முன்னெடுக்கப்பட்ட வழக்கு இது” என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

#TamilSchoolmychoice

“மிகவும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ள பழங்குடி மக்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கும் மத்திய அரசுக்கு கடப்பாடு இருப்பதால், இத்தகைய ‘குழப்பமான’ முடிவுக்கு எதிராக தேசிய சட்டத்துறை தலைவர் மேல்முறையீடு செய்ய வேண்டும். இந்த வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, உண்மையில் தவறான முடிவு” என்றும் செனட்டர் பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

பூரவகுடி மக்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் வேதமூர்த்தி – கோப்புப் படம்

அஸ்லி மக்களின் நலத்தைப் பேணுவதிலும் அவர்களின் முன்னேற்றத்தை உறுதி செய்வதிலும் மத்திய அரசுக்கு பொறுப்பு உள்ளது என்பதை கூட்டரசு அரசியல் சாசனமும் நாடு விடுதலை அடைவதற்கு முன் 1954-இல் இயற்றப் பட்ட பழங்குடி மக்கள் சட்டமும் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன என்று தேசிய ஒற்றுமைத் துறை முன்னாள் அமைச்சரும் அஸ்லி சமுதாய பொறுப்பாளருமான பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.

நீதித்துறை என்பது சமுதாயம் அடையும் பரிணாம வளர்ச்சியின் ஒரு கூறாக பிரதிபலிக்க வேண்டும்; அத்துடன், சட்ட சரத்துகளின் நேரடி அல்லது தொழில்நுட்ப விளக்கத்தைக் கடந்து அரசியலமைப்புச் சட்டத்தின் உள்ளார்ந்த நோக்கத்தையும் நீதிமன்றம் ஆழமாகப் பார்க்க வேண்டும்.

மாநில அரசின் முடிவால் பூர்வகுடி மக்கள் தங்களின் பாரம்பரிய நிலத்தை இழக்க நேர்வதுடன் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது; அத்துடன் போஸ் சிம்போர் வட்டாரத்தில் சுற்றுசூழல் மாசு ஏற்பட்டு, இயற்கை நில வடிவமைப்பும் சேதமடைந்துள்ளதாக புத்ராஜெயா சார்பில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

மத்தியக் கூட்டரசு பொது மக்களின் அறங்காவலரைப் போன்றது; அந்த வகையில் பூர்வகுடியினர் உட்பட தன் குடிமக்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு உள்ளது. பூர்வகுடி மக்கள் மேம்பாட்டுத் துறை உருவாக்கம், அதைப்போல அவர்களின் நில உரிமைக்காக 1961-இல் ஏற்றுக்கொள்ளப் பட்ட கொள்கைமுடிவு யாவும் அஸ்லி மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளதை இன்னும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

பூர்வகுடி மக்களுக்கான நிலத்தை உறுதிப்படுத்தும் மத்தியக் கூட்டரசின் சட்ட மேலாண்மையை அரசியல் சாசனம் மேலும் உறுதிப்படுத்துகிறது. இன்னும் குறிப்பாக, அரசியல் சாசன விதி 160(2), பூர்வகுடி மக்களுக்கான இடத்தை கையகப்படுத்தும் அதிகாரத்தை மத்தியக் கூட்டரசுக்கு அளிக்கிறது என்றும் செனட்டர் பொன்.வேதமூர்த்தி மேலும் வலியுறுத்தி உள்ளார்.