Home Photo News மலேசியா வந்து சென்றால் தமிழக முதலமைச்சராகும் இராசி

மலேசியா வந்து சென்றால் தமிழக முதலமைச்சராகும் இராசி

929
0
SHARE
Ad

(தமிழகத்தின் முக்கியத் தலைவர்களில் நால்வர் மலேசியா வந்து சென்றவுடன் அடுத்த சில ஆண்டுகளில் தமிழக முதல்வராகப் பதவியேற்கும் ஆச்சரியமான திருப்பங்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. அந்த சுவாரசிய நிகழ்வுகளின் பின்னணியை விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

தமிழக அரசியல் தலைவர்களில் சிலர் மலேசியாவுக்கு வருகை தந்து விட்டு திரும்பியவுடன் அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் நாட்டின் முதலமைச்சராகப் பதவியில் அமரும் இராசி இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதைக் கேட்பதற்கு அதிசயமாக, ஆச்சரியமாக இருக்கலாம். தற்செயலாக நடந்தது என சிலர் வாதிடலாம். ஆனால் வரிசையாக இன்றுவரை இந்த இராசி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பேரறிஞர் அண்ணாவிடம் தொடங்கிய இராசி

#TamilSchoolmychoice

இந்த இராசி பேரறிஞர் அண்ணா என தமிழர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட திமுக தலைவர் சி.என்.அண்ணாதுரையிடம் இருந்து தொடங்கியது.

1965-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மலேசியாவுக்கான வருகையை மேற்கொண்டார் அண்ணா. அதுதான் அவரின் முதல் மலேசிய வருகை. இங்கு பல கூட்டங்களில் பேசினார். அவரின் அழகுத் தமிழ் உரையைக் கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர்.

அப்போது அண்ணா திமுக பொதுச் செயலாளர் மட்டும்தான். திமுக எதிர்க்கட்சியாக தமிழக சட்டமன்றத்தில் இடம் பெற்றிருந்து. காங்கிரசின் ஆட்சி அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அண்ணா தமிழ் நாடு திரும்பியதும் 1967-இல் நடைபெற தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. அண்ணாவும் தமிழ் நாட்டு முதலமைச்சரானார்.

எம்ஜிஆருக்கு வாய்த்தது இரண்டாவது இராசி

1970-ஆம் ஆண்டில் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்காக மலேசியாவுக்கு வருகை தந்தார் எம்ஜிஆர். அவருக்கும் அதுதான் முதல் மலேசியப் பயணம்.

எம்ஜிஆர் மலேசியா வந்தபோது, திமுகவில் அவர் பொருளாளராக இருந்தார். பல நாடுகளில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தமிழ் நாடு திரும்பிய அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவருக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் இடையில் மோதல் வெடித்தது.

1972-ஆம் ஆண்டில் எம்ஜிஆர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதிமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.

1977-ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுகவைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றி தமிழக முதலமைச்சரானார் எம்ஜிஆர்.

அதன்பிறகு 3 தவணைகளாக அவரை யாரும் முதலமைச்சர் பதவியில் இருந்து யாரும் அசைக்க முடியவில்லை. 1987-ஆம் ஆண்டு காலமாகும்வரை அவரே முதலமைச்சரானார்.

கருணாநிதிக்கு வாய்த்தது 3-வது இராசி

அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதலமைச்சரான கருணாநிதி 1971 பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். ஆனால் 1977 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார்.

அதன்பிறகு எம்ஜிஆர் இருக்கும்வரை அவரால் தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவியைக் கைப்பற்ற முடியவில்லை.

இந்த சூழலில்தான் 1987-ஆம் ஆண்டில் 6-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நடைபெற்றது. அப்போது மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவராக இருந்தவர் அப்போதைய அமைச்சர் துன் ச.சாமிவேலு.

சென்னைக்கு சென்று, தமிழக முதலமைச்சரான எம்ஜிஆருக்கு மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார் சாமிவேலு. அப்போது உடல் நலம் குன்றியிருந்த எம்ஜிஆர் மாநாட்டிற்கு வர முடியாது என்று கூறிவிட்டார்.

ஏனோ சில காரணங்களால் தமிழ் நாடு அரசு சார்பாக அதிகாரத்துவ பிரதிநிதிகளையும் அனுப்ப மறுத்துவிட்டார் எம்ஜிஆர்.

தனது சென்னை வருகையின்போது தமிழினத் தலைவர் என்ற முறையில் அழைக்கிறேன் என கருணாநிதியையும் நேரில் சந்தித்து மாநாட்டுக்கு வர அழைப்பு விடுத்தார் சாமிவேலு.

அந்த அழைப்பை ஏற்று கோலாலம்பூர் வந்தார் கருணாநிதி. அவருக்கும் அதுதான் முதல் மலேசிய வருகை. இரண்டு நாட்கள் மட்டுமே கோலாலம்பூரில் தங்கி நிகழ்ச்சிகளில் கலந்து விட்டு தமிழகம் திரும்பினார் கருணாநிதி.

அதே 1987-ஆம் ஆண்டில் டிசம்பரில் எம்ஜிஆர் மறைந்தார். 1989-ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் திமுக வெற்றிபெற, மீண்டும் முதலமைச்சரானார் கருணாநிதி.

அடுத்தடுத்த தவணைகளில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் மாறி மாறி தமிழக முதலமைச்சர்களாகத் தொடர்ந்தாலும் அவர்கள் இருவரில் யாரும் மலேசியாவுக்கு வருகை தரவில்லை.

ஜெயலலிதா தன் வாழ்நாளில் மலேசியாவுக்கு வந்ததே இல்லை.

அண்மையில் வாய்த்தது ஸ்டாலினுக்கு இராசி

இந்நிலையில்தான் 2018-ஆம் ஆண்டில் மலேசியாவுக்கு வருகை தந்தார் மு.க.ஸ்டாலின்.

அந்த ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமையிலான கண்ணதாசன் அறவாரியமும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அந்த வருகையின்போது மலேசியப் பிரதமராக இருந்த டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கையும் சந்தித்தார் ஸ்டாலின்.

அந்த காலகட்டத்தில் ஜெயலலிதா காலமாகி விட்டார். தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி தொடர்ந்து கொண்டிருந்தது.

ஸ்டாலின் வருகை மேற்கொண்ட பின் 3 ஆண்டுகளில் – அதாவது இந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் திமுக அமோக வெற்றி பெற முதன் முறையாக முதலமைச்சராகியிருக்கிறார் ஸ்டாலின்.

மலேசியா வந்து சென்ற பின் அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகும் வாய்ப்பு, இராசி – அடுத்தடுத்து 4 தமிழகத் தலைவர்களுக்கு நிகழ்ந்திருப்பது, நம் மலேசியா நாட்டின் இராசியா அல்லது தற்செயலாக நடந்த ஒன்றா என்பதை வாசகர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

-இரா.முத்தரசன்