கோலாலம்பூர் : மறைந்து 34 ஆண்டுகள் கடந்து விட்டாலும் “எம்ஜிஆர்” என்ற மூன்றெழுத்து இன்றுவரை உலகமெங்கும் அவரது இரசிகர்களை ஒன்றாகப் பிணைத்து வருகிறது.
அதுமட்டுமல்ல! இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்றைக்கு தமிழக அரசியலில் வாக்கு வங்கிப் பெயராக அனைத்துக் கட்சிகளாலும் பயன்படுத்தப்படுவதும் அவரது பெயர்தான்.
சிறையிலிருந்து வெளியான பின்னர் சசிகலா சென்று மாலை அணிவித்து மரியாதை செய்ததும் எம்ஜிஆரின் உருவச் சிலைக்குத்தான்!
பாஜக கூட எம்ஜிஆரை உரிமைக் கொண்டாட, இன்னொரு பக்கம் திமுக தலைவர் ஸ்டாலினே எம்ஜிஆருடனான தனது நெருக்கத்தைப் பற்றி மேடைகளில் பேசி வருகிறார்.
கடந்த ஜனவரி 17-ஆம் தேதி எம்ஜிஆரின் பிறந்தநாள். அன்று செல்லியல் யூடியூப் காணொலித் தளத்தில் எம்ஜிஆர் குறித்த காணொலி ஒன்று பதிவேற்றம் கண்டது. உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்காக எம்ஜிஆர் தனது படப்பிடிப்புக் குழுவினரோடு மலேசியா வந்தபோது நடந்த சம்பங்களை இந்தக் காணொலி விவரித்தது.
இன்றுவரை அந்தக் காணொலி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
எம்ஜிஆர் குறித்த செய்திகளைப் படிப்பதிலும் காணொலியாகப் பார்ப்பதிலும் அவரது இரசிகர்கள் இன்னும் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதை இந்த அதிகமான பார்வையாளர்கள் ஈர்ப்பு எடுத்துக் காட்டுகிறது.
1970ஆம் ஆண்டில் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்காக மலேசியா வந்திருந்தபோது நிகழ்ந்த சில சுவையான சம்பவங்கள் -அந்தப் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது தொடர்பான சில சுவாரசியங்களை – மேற்குறிப்பிட்ட அந்த காணொலி இரண்டு பகுதிகளாக விவரிக்கின்றது.
அந்தக் காணொலியின் கட்டுரை வடிவத்தைக் கீழே காணலாம்:
எம்ஜிஆர் மலேசியா வந்தபோது…
அந்தக் காலத்தில் சில ஆசிய நாடுகளில் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கான படப்பிடிப்புகளை நடத்திய எம்ஜிஆர் அதன் ஒரு பகுதியாக மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கும் படப்பிடிப்புக் குழுவினருடன் வந்தார்.
அப்போது பத்திரிகைகளில் அவரது வருகை குறித்து பெரிய அளவில் செய்திகள் வெளியிடப்பட்டன.
எம்ஜிஆருக்காக சில நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் இங்கு மலேசிய சினிமாவுடன் தொடர்பு கொண்டிருந்த டான்ஸ்ரீ எல்.கிருஷ்ணன் (படம்). பிரபல மலாய்க் கலைஞர் பி.ரம்லியை வைத்து பல படங்கள்எடுத்தவர்.
கிருஷ்ணனே எம்ஜிஆர் வருகை தொடர்பான பல ஏற்பாடுகளை செய்தார். அவரது இல்லத்திலேயே எம்ஜிஆருக்கு விருந்துபசரிப்பும் நடத்தினார்.
ஷா பிரதர்ஸ் நிறுவனம் எம்ஜிஆருக்கு வழங்கிய ஒத்துழைப்பு
எம்ஜிஆரின் படப்பிடிப்புக்கான உதவிகளையும் மற்ற ஒத்துழைப்புகளையும் வழங்கியது அப்போது கொடிகட்டிப் பறந்த ஷா பிரதர்ஸ் நிறுவனம்.
இந்த நிறுவனத்தை ஹாங்காங்கில் இருந்து ரன் ரன் ஷா, ரன் மி ஷா என்ற இரு சகோதரர்கள் வெற்றிரகரமாக நடத்தி வந்தனர். சிங்கப்பூர், மலேசியாவில் பல திரையரங்குகளைக் கொண்டிருந்த இந்த நிறுவனம், பல சீனப் படங்களையும் தயாரித்தது.
இன்றைக்கு இந்த நிறுவனம் நடத்தப்படவில்லை. இதன் பெரும்பாலான திரைப்பட ஆவணங்கள், சொத்துகள், திரைப்பட உரிமைகள் விற்கப்பட்டு விட்டன. அதன் திரைப்பட உரிமைகளில் பெரும்பான்மையானவற்றை ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனம்தான் வாங்கியிருக்கிறது.
எம்ஜிஆரின் பெரும்பாலான படங்களை மலேசியாவில் திரையீடு செய்து அந்தப் படங்களின் வெற்றியால் பெரும் வருமானத்தை ஈட்டியிருந்ததால் ஷா பிரதர்ஸ் சகோதரர்கள் எம்ஜிஆர் மீது மிகுந்த அபிமானமும் மரியாதையும் வைத்திருந்தார்கள்.
ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு செலவினங்களை ஷா பிரதர்ஸ் நிறுவனமே ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் உலவின. உலகம் சுற்றும் வாலிபனை மலேசியா, சிங்கப்பூரில் திரையீடு செய்ததும் ஷா பிரதர்ஸ் நிறுவனம்தான்.
அந்தப் படத்திற்கான செலவினங்களை முதலில் முன்பணமாக செலுத்தி விட்டு அதன் அடிப்படையிலேயே உலகம் சுற்றும் வாலிபனை நமது நாட்டில் ஷா பிரதர்ஸ் நிறுவனம் திரையிட்டது என்றும் அப்போது தகவல்கள் வெளியிடப்பட்டன.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் சிங்கப்பூரில் ஒரு வீட்டில் எம்ஜிஆர் மஞ்சுளா சம்பந்தப்பட்ட சில காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அந்த வீடு ஷா பிரதர்ஸ் சகோதரர்கள் அப்போது தங்கியிருந்த வீடு என்பதும் இன்னொரு சுவாரசியம்.
விமான நிலையத்தில் திரண்ட கூட்டம்
எம்ஜிஆர் கோலாலம்பூருக்கு வந்தபோது அனைத்துலக விமான நிலையம் சுபாங்கில் இருந்தது. அந்த விமான நிலையத்தில் விமானத்திலிருந்து பயணிகள் இறங்குவதை அனைவரும் 1-வது மாடித் தளத்திலிருந்து பார்க்கலாம். இப்போது போல கட்டுப்பாடுகள் இல்லை.
எம்ஜிஆர் வந்தபோது மிகப்பெரிய இரசிகர்கள் கூட்டம் அவரை வரவேற்க விமான நிலையத்தில் திரண்டனர். அந்த காலகட்டத்தில் எந்தப் பிரமுகருக்குமே அந்த அளவுக்கு மலேசியாவில் கூட்டம் திரண்டது இல்லை என அப்போது ஆங்கிலப் பத்திரிகைகள் கூட எழுதின.
எம்ஜிஆர் எப்போது எங்கு படப்பிடிப்பு நடத்தினார் என்பது இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மலேசியாவில் சில இடங்களில் அவர் படப்பிடிப்பை நடத்தினார் என்று கூறப்பட்டாலும் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவந்தபோது லில்லி மலருக்கு கொண்டாட்டம் என்ற பாடலில் மட்டுமே சில வினாடிகளுக்கு மலேசியக் காட்சிகள் இடம் பெற்றன.
கோலாலம்பூர் விமான நிலையத்தைக் காட்டிவிட்டு அந்த விமான நிலையத்தின் படிக்கட்டுகளில் எம்ஜிஆரும் மஞ்சுளாவும் ஓடி வரும் காட்சிகள் காட்டப்பட்டன. அந்தக் காட்சிகளின் போது சுபாங் விமானநிலையத்தில் அமைந்திருந்த பல்வேறு நாடுகளின் நேரத்தைக் காட்டும் பிரம்மாண்ட கடிகாரங்கள் காட்டப்பட்டன
அப்போது அந்த கடிகாரங்கள் சுபாங் விமானநிலையத்தின் தனி அடையாளமாகத் திகழ்ந்தன.
விமான நிலையம் வருகின்ற யாவரும் சற்று நேரம் நின்று அந்த பிரம்மாண்ட கடிகாரங்களை பார்ப்பார்கள். ஒவ்வொரு கடிகாரமும் ஒவ்வொரு நாட்டின் நேரத்தையும் காட்டும் வண்ணம் அமைக்கப்பட்டு அந்த எல்லாக் கடிகாரங்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும்.
புதுமையாகவும், வித்தியாசமாகவும் இருந்ததால் கடிகாரங்களைத் தனது பாடல் காட்சியில் எம்ஜிஆர் வைத்திருந்தார்.
எம்ஜிஆருக்கான பொது நிகழ்ச்சிகள்
எம்ஜிஆருக்காக சில பொது நிகழ்ச்சிகள் கோலாலம்பூரில் நடத்தப்பட்டன. தலைநகரைத் தவிர மற்ற பகுதிகளுக்கு எம்ஜிஆர் செல்லவில்லை.
அப்போது ஸ்டேடியம் நெகாரா என்பதுதான் மிகப் பிரமாண்டமான உள் அரங்கம். அந்த அரங்கத்தில் எம்ஜிஆருக்காக பொதுமக்கள் கலந்துகொள்ளும் வகையில் ஒரு பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் படங்களில் நடிக்கும்போது எப்படி தோன்றுவாரோ அதே தோற்றத்துடன் எம்ஜிஆர் முழு ஒப்பனையோடு கலந்து கொண்டார்.
பின்னர் தனியார் உணவகம் ஒன்றில் விருந்து நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சிகளில் எம்ஜிஆருடன் பிரபல மலாய்க் கலைஞர் டான்ஸ்ரீ பி.ரம்லியும் கலந்து கொண்டார். அப்போது பிரபல நடிகராகவும் மலாய் திரைப்படங்களின் ஹீரோவாகவும் திகழ்ந்த பி.ரம்லி பரம எம்ஜிஆரின் இரசிகராகவும் இருந்தவர்.
சில நாட்கள் மட்டுமே மலேசியாவில் படப்பிடிப்பை நடத்திய பின்னர் எம்ஜிஆர் நமது நாட்டிலிருந்து புறப்பட்டார்.
பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் 1973 மே மாதத்தில் உலகம் சுற்றும் வாலிபன் தமிழ் நாட்டிலும் மலேசியா, சிங்கப்பூரிலும் வெளியீடு கண்டது.
தமிழ்நாடு முழுக்க பல வாரங்கள் வெற்றிகரமாக ஓடி மிகப்பெரிய சாதனை படைத்த படைத்தது அந்தப் படம்.
மலேசியாவில் உலகம் சுற்றும் வாலிபன் படைத்த சாதனைகள்
மலேசியாவின் எம்ஜிஆர் படங்கள் திரையிடப்படும் போது கள்ளச்சந்தையில் சில குழுக்கள் பெருமளவில் முன்கூட்டியே டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு அதிக விலைக்கு இரசிகர்களுக்கு விற்பது வழக்கம். அவ்வப்போது காவல்துறையினர் அவர்களை பிடிப்பார்கள் என்றாலும் இது ஒரு வழக்கமாகவே இருந்து வந்தது.
பிரபலமான எல்லாத் தமிழ் படங்களுக்கும் இத்தகைய நிலைமை இருந்தது.
உதாரணமாக தலைநகர் கொலிசியம் தியேட்டரில் ஒரு டிக்கட், 80 காசு, 1 ரிங்கிட் 25 காசு, 1 ரிங்கிட் 60 காசு, 2 ரிங்கிட் 30 காசு என்ற அளவில் திரையரங்கில் விற்கப்படும்.
பொதுவாக எம்ஜிஆர் படங்களுக்கு இதே டிக்கட்டுகள் பத்து ரிங்கிட் முதல் 20 ரிங்கிட் வரை முதல் காட்சிகளில் விற்கப்படும்.
அந்த வகையில் உலகம் சுற்றும் வாலிபன் வெளியானபோது முதலில் ஒரு காட்சி மட்டுமே திரையிடப்பட்டது.
அந்தக் காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்று முடிந்து பின்னர் கள்ள சந்தையில் 100 ரிங்கிட் வரை ஒரு டிக்கட் விற்கப்பட்டது.
1973 ஆம் ஆண்டில் 100 ரிங்கிட் என்பது மிகப் பெரிய தொகையாகும் இருப்பினும் பலர் அந்தப் பணத்தை செலுத்தி டிக்கெட்டுகளை வாங்கி படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.
பின்னர் இரண்டாவது காட்சிக்கான அந்த டிக்கெட்டுகள் 50 ரிங்கிட் விலையில் விற்கப்பட்டன.
அதன் பின்னரே வழக்கமான காட்சிகள் எல்லா திரையரங்குகளிலும் திரையிடப்பட்டன.
தலைநகரில் செந்துல் பகுதியில் “செந்தூல் தியேட்டர்” என்ற பெயரிலேயே நவீன திரை அரங்கு ஒன்றை அப்போது ஷா பிரதர்ஸ் நிறுவனம் நிர்மாணித்தது.
இந்த திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் படம் உலகம் சுற்றும் வாலிபன்தான். பல நாட்களுக்கு இங்கே அந்தப் படம் ஓடியது.
செந்துல் திரையரங்கு திறந்தவுடன் ஓர் ஆங்கிலப் படம் சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. செந்துல் எம் பி எஸ் (மெதடிஸ்ட் பாய்ஸ் ஸ்கூல்) ஆங்கிலப் பள்ளி நிதிக்காக அந்த ஆங்கிலப் படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது.
அதன் பின்னர் முழு நேர காட்சிகளாக இந்தத் திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் படம் உலகம் சுற்றும் வாலிபன்.
நாடு முழுமையும் வெற்றிகரமாக ஓடிய இந்தப்படத்தின் மூலம் இலாபத்தில் செந்துல் தியேட்டர் கட்டியதற்கான முழு செலவுகளையும் ஷா பிரதர்ஸ் நிறுவனத்தார் ஈடுகட்டியிருப்பார்கள் என இரசிகர்கள் அப்போது பேசிக் கொள்வார்கள். அந்த அளவுக்கு நாடு முழுவதிலும் வெற்றிகரமாக ஓடியது உலகம் சுற்றும் வாலிபன்.
இவ்வாறாக பல சுவையான நிகழ்ச்சிகளை மலேசியாவுக்கான எம்ஜிஆரின் வருகையும், உலகம் சுற்றும் வாலிபன் மலேசியப் படப்பிடிப்பும் கொண்டிருந்தது.
அதன் பின்னர் தமிழகம் திரும்பிய எம்ஜிஆர் முதல்வரான பின்னரும் மலேசியாவுக்கு வருகை எதனையும் மேற்கொள்ளவில்லை.
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு அவர் இங்கு வந்ததுதான் முதலும் கடைசியுமான அவரது மலேசிய வருகை. அந்த வகையில் எம்ஜிஆரின் மலேசிய இரசிகர்கள் பலரும் அவரது வருகையை இன்றைக்கும் நினைவு கூர்ந்து மகிழ்கின்றனர்.