Home One Line P2 எம்ஜிஆர் இல்லம் சென்ற சசிகலா – தமிழக அரசியலைக் கலக்குகிறார்!

எம்ஜிஆர் இல்லம் சென்ற சசிகலா – தமிழக அரசியலைக் கலக்குகிறார்!

653
0
SHARE
Ad

சென்னை : சசிகலா வரவால் அதிமுகவில் பிளவு ஏற்படும், அதன் பயனாக எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்குகள் பிளவுபடும், என திமுக கனவு கொண்டிருக்க அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் சசிகலா.

நமது பொது எதிரிதான் திமுகதான் அதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் என அதிமுகவினருக்கு அறைகூவல் விடுத்து அதிரடி கிளப்பியுள்ளார் சசிகலா.

பெங்களூருவில் இருந்து நேற்று திங்கட்கிழமை (பிப்ரவரி 8) காரில் புறப்பட்டவர், சுமார் 23 மணி நேரம் பயணம் மேற்கொண்டு, வழிநெடுகத் தன்னை வரவேற்கத் திரண்ட தொண்டர்களின் கூட்டத்தைக் கடந்து  பெங்களூருவில் இருந்து சென்னை வந்தடைந்திருக்கிறார் சசிகலா.

#TamilSchoolmychoice

சென்னை வந்ததும் முதலில் இராமாவரத்தில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்துக்கு சென்றார் சசிகலா. அங்குள்ள எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்குள்ள எம்ஜிஆரின் உருவச்சிலைக்கு அவர் மாலை அணிவித்தார்.

இதையடுத்து தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள இல்லத்திற்கு சசிகலா சென்றார்.

இதற்கிடையில் அதிமுக ஆதரவாளர்களையும், தனது ஆதரவாளர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியை சசிகலா தனது கையிலெடுத்து முன் நகர்த்தத் தொடங்கியிருப்பது  தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

சசிகலா-தினகரன் தரப்பையும் அதிமுகவையும் ஏதோ ஒரு வடிவில் கூட்டணியாக தமிழக சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க ஒருங்கிணைத்தால், அதன் மூலம் வெற்றி வாகை சூட முடியும் என நம்பும் பாஜக அதற்கான வியூகங்களை வகுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எங்களைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எங்களுக்கு எதிரி அல்ல. எங்களுக்கு ஒரே பொது எதிரி தி.மு.க. தான் என சசிகலா அறிவித்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா உடல் நலம் விசாரித்த ரஜினிகாந்த்

சசிகலா வருகை குறித்துக் கருத்து தெரிவித்த டிடிவி தினகரன் சசிகலா உடல்நலம் குறித்து ரஜினிகாந்த் தொலைபேசியில் தன்னிடம் விசாரித்தார் என தெரிவித்தார்.

இன்னொரு திருப்பமாக தமிழக அரசு, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் சொத்துகளை அரசுடமை ஆக்கியுள்ளது. அவர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின்படி அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்கும் நடவடிக்கையை அதிமுக அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.