பெங்களூரு : சிகிச்சைகள் முடிவடைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து வெளியேறிய சசிகலா முதலமைச்சராக இருந்த காலத்தில் ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரைப் பயன்படுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்தக் கார் ஜெயா பப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் முதல்வராக இருந்த காலத்தில் ஜெயலலிதா அந்தக் காரில்தான் பவனி வந்தார் என்றும் தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.

மேலும், சசிகலா பயன்படுத்திய அந்தக் காரில் அதிமுக கொடி பறந்து கொண்டிருந்தது என்பதும் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியது முறையற்றது என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார்.
எனினும் மேலும் சில நாட்களுக்கு சசிகலா பெங்களூருவில் தங்கி ஓய்வெடுப்பார் என டிடிவி தினகரன் தெரிவித்தார். “அமமுக கட்சியைத் தோற்றுவித்து அதன் மூலம் அதிமுகவை மீட்டெடுப்பதுதான் சசிகலாவின் நோக்கம். எனவேதான் அவர் அதிமுக கட்சிக் கொடியைத் தனது காரில் பயன்படுத்தினார். மேலும் இன்றுவரை அதிமுகவின் அதிகாரபூர்வ பொதுச் செயலாளர் சசிகலாதான்” எனவும் தினகரன் தெரிவித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வெளியேறினார்.
இதற்கிடையில் அவரது விடுதலையைத் தொடர்ந்து, விரைவில் நடைபெறவிருக்கும் தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து அவர் என்ன முடிவெடுப்பார் என்பதைத் தெரிந்து கொள்ள தமிழக அரசியல் வட்டாரங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.
அவரது அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் பல்வேறு ஆரூடங்கள் கூறப்படுகின்றன.