நேப்பிடோ : மியன்மார் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் ஆளும் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் சிலர் இன்று திங்கட்கிழமை அதிகாலை (பிப்ரவரி 1) ஆயுதப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டனர்.
இந்த தகவலை ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக மன்றத்தின் பேச்சாளர் ஒருவர் இன்று திங்கட்கிழமை அறிவித்தார்.
கடந்த சில நாட்களாக ஆளும் ஜனநாயக அரசாங்கத்திற்கும், இராணுவ தலைமைக்கும் இடையில் மோதல்கள், நெருக்கடிகள் முற்றியதைத் தொடர்ந்து அந்த நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்படலாம் என்ற ஐயப்பாடு கடந்த சில நாட்களாக எழுந்திருந்தது.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றன என்றும் அதன் காரணமாகவே ஆளும் கட்சி வெற்றி பெற்றது என இராணுவம் குற்றம் சாட்டி வந்தது.
மியன்மான் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியிருந்தாலும், அந்த நாட்டின் மீது இராணுவம் தொடர்ந்து ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்தது.
நீண்டகாலமாக இராணுவ ஆட்சியில் சிக்கியிருந்தது அந்த நாடு. அப்போது ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
அந்த காலகட்டத்தில் பல நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளால் மியன்மார் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவைக் கண்டிருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்னால் மியன்மார் ஜனநாயக பாதைக்கு திரும்பியது. பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. ஆங் சாங் சூகியின் கட்சி ஆட்சி அமைத்தது.
அதை தொடர்ந்து அந்த நாட்டின் மீதான பொருளாதார தடைகள் கட்டம் கட்டமாக குறைக்கப்பட்டன அல்லது இரத்து செய்யப்பட்டன.
ஆங் சான் சூகி ஆட்சிக்காலத்தில் ரோஹிங்யா அகதிகள் விவகாரத்தை கையாண்ட விதத்தில் உலக நாடுகளின் கண்டனத்திற்கு அவர் ஆளானார்.
இன்றைய நிலவரப்படி அந்த நாட்டில் நிலைமை மீண்டும் மாமூல் நிலைக்குத் திரும்புமா அல்லது இராணுவ புரட்சி ஏற்பட்டு நாடு மீண்டும் இராணுவ ஆட்சிக்குத் திரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதிய அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள ஜோ பைடன் எதிர்நோக்கும் முதல் அனைத்துலக விவகாரமாக மியன்மாரின் ஏற்பட்டுள்ள இராணுவப் புரட்சி திகழக் கூடும்.