கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 31) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து 3-வது நாளாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இன்று 5,298 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் 5,295 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 3 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால் பதிவானவை.
இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 214,959 ஆக அதிகரித்துள்ளன.
தொற்றுகளில் இருந்து குணமாகி இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 166,049 ஆக அதிகரித்துள்ளன.
இன்றைய நிலையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 48,150 ஆகும்.
சிகிச்சை பெற்று வருபவர்களில் 313 பேர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர்களில் 127 பேர்களுக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
இன்றைய ஒரு நாளில் 14 மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 760 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலங்கள் அளவில் மிக அதிகமான சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவாகி உள்ளன. 2,460 சம்பவங்கள் சிலாங்கூரில் மட்டும் பதிவாகி உள்ளன. இதை அடுத்து 1,020 சம்பவங்கள் ஜோகூரிலும், கோலாலம்பூரில் 783 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.