குவந்தான்: பகாங் மாநில அரசு 8,571 ஹெக்டர் நிலத்தை பூர்வ குடியினருக்கு ஒதுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதன் மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த தொகை இதுவரை வர்த்தமானி செய்யப்பட்ட 7,156 ஹெக்டர் நிலத்திற்கும் கூடுதலானது என்று அவர் குறிப்பிட்டார்.
“இந்த முயற்சி பழங்குடி மக்களின் நலனுக்கான பங்களிப்புகளில் ஒன்றாகும். குறிப்பாக தீபகற்ப மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான பழங்குடியின மக்களைக் கொண்ட மாநிலம் பகாங் ஆகும். பகாங்கில், பூர்வ குடியினரின் மொத்த எண்ணிக்கை 89,375 அல்லது மொத்தத்தில் 45.1 விழுக்காடாகும்” என்று அவர் இன்று புதன்கிழமை பெராவில் உள்ள போஸ் இஸ்காண்டாரில் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், செமெலாய் பழங்குடியினரை உள்ளடக்கிய போஸ் இஸ்காண்டார் மக்களுக்கு 10,000 ரிங்கிட் ஒதுக்கீடு செய்வதாக ரோஸ்டி அறிவித்தார்.
உள்கட்டமைப்பு உள்ளிட்ட அபிவிருத்தி நீரோட்டத்தில் பழங்குடியின மக்களின் நலனில் மாநில அரசின் முன்னுரிமை செலுத்தும் என்று வான் ரோஸ்டி கூறினார்.