புது டில்லி: சில நாட்களுக்கு முன்னர் இந்திய அமலாக்கத் துறை, முன்னாள் இந்திய நிதியமைச்சரான ப.சிதம்பரத்தைக் கைது செய்ய வேண்டும் என்றும், தங்கள் பாதுகாப்பில் வைத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தது.
அது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் அவரை கைது செய்ய மட்டும் உத்தரவு அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று புதன்கிழமை டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணையை தொடர்ந்து, அமலாக்கத் துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் அமலாக்கத் துறை அவரை தங்களது பாதுகாப்பில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் முறையிடும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2000-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் 305 கோடி ரூபாய் வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.