கோலாலம்பூர்: உலகளாவிய அபிலாஷைகளை அடிக்கோடிட்டுக் காட்டும் விதமாக, புதிய வணிக சின்னம் மற்றும் சுலோகத்தையும் புரோட்டோன் நிறுவனம் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. இது அந்நிறுவனத்தின் திசையை முன்பு இருந்ததை விட வேறுபட்ட பாதையில் முன்னோக்கி நகர்த்தும் என்று நம்பப்படுகிறது.
சீனாவின் ஜெஜியாங் கீலி ஹோல்டிங் குழுமத்துடனான கூட்டு ஒத்துழைப்புக்கு பிறகு, புரோட்டோன் குறுகிய கால இடைவெளியில் வலுவான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த மாற்றமானது நிகழ்ந்துள்ளது.
தற்போதைய புரோட்டோனின் சின்னம் ஒரு புலித் தலையைக் கொண்டிருக்கிறது. புலியின் தலை அம்பு குறி போல முன்னோக்கி இருப்பது, வெற்றியை நோக்கி புரோட்டோன் முன்னேறுவதைக் குறிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மலேசியாவில் பொருத்தப்பட இருக்கும் எக்ஸ்70 ரக கார்களுக்கு, இது முதலாகப் பயன்படுத்தப்பட உள்ளது.
“ஊக்கமளிக்கும் இணைப்புகள்” (“Inspiring Connections” ) எனும் சுலோகத்தைக் கொண்டு இனி புரோட்டோன் வெற்றிப் பாதையில் நடக்கும் என்று எதிர்ப்பார்கப்படுகிறது.