கோலாலம்பூர்: புரோட்டோன் எக்ஸ் 50 இரண்டு வாரங்களுக்குள் 20,000 முன்பதிவுகள் பெற்று பொதுமக்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், புதிய இந்த புதிய எஸ்யூவி ரக காருக்கு முன்பதிவுகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறும் அங்கீகரிக்கப்படாத நபர்கள் இருப்பதாகத் தெரிகிறது.
பொறுப்பற்ற சில தரப்புகள் தங்களை தவறாக சித்தரிப்பதாக புரோட்டோன் கூறியுள்ளது. அவர்கள் இதன் மூலம் இலாபம் பெற முயல்கின்றன என்பதை அது கூறியது. அங்கீகரிக்கப்பட்ட புரோட்டோன் விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் மூலம் செய்யப்பட்ட முன்பதிவுகள் மட்டுமே முறையானவை என்று புரோட்டோன் வலியுறுத்துகிறது.
நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான முகவர்களாக செயல்பட, அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை கட்டுப்பாட்டுக்கு வெளியே எந்த மூன்றாம் தரப்பினரையும் அது நியமிக்கவில்லை.
இது குறித்த தகவல்களுக்கு நிறுவனத்தை நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு புரோட்டோன் பயனீட்டாளர்களை வலியுறுத்துகிறது.
இதற்கிடையில், புரோட்டோன் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் (புரோட்டோன்) விற்பனை ஆகஸ்டு மாதம் முதல் செப்டம்பர் வரை வேகமாக அதிகரித்துள்ளதாக ஓர் அறிக்கையில் அது தெரிவித்திருந்தது.
“புரோட்டோன் இந்த ஆண்டு 73,607 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 21.6 விழுக்காடு சந்தைப் பங்கிற்கு சமமானது மற்றும் மலேசிய வாகனத் தொழிலில் இரண்டாவது இடத்தில் உள்ளது” என்று அது தெரிவித்திருந்தது.
மலேசியாவின் சிறந்த விற்பனையில் உள்ள எஸ்யூவி ரக வாகனமான, புரோட்டோன் எக்ஸ் 70, சிறந்த விற்பனையை பதிவு செய்துள்ளது. அதாவது 2,849 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.
இது 2020- ஆம் ஆண்டில் இரண்டாவது சிறந்த விற்பனை செயல்திறன் ஆகும். புரோட்டோன் பெர்சோனா மற்றும் புரோட்டோன் எக்ஸோராவும் அந்தந்த பிரிவுகளில் அதிகம் விற்பனையாகும் வாகனங்களாக இருக்கின்றன.
புரோட்டோன் எக்ஸ் 50 இரண்டு வாரங்களில் 20,000 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. புரோட்டோன் எக்ஸ் 50 புரோட்டோனின் சமீபத்திய மாதிரியாகும்.
“புரோட்டோன் எக்ஸ் 50- இல் அதிக அக்கறை காட்டிய வாடிக்கையாளர்களுக்கு புரோட்டோன் நன்றி கூற விரும்புகிறது. 2020 கடைசி மூன்று மாதங்களில் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கான உற்பத்தி செயல்முறையில் புரோட்டோனில் நாங்கள் கவனம் செலுத்துவோம். அதே நேரத்தில் தயாரிப்பு தரத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்போம், ” என்று அது கூறியது.