கோலாலம்பூர் – கொவிட்-19 தொடர்பில் கடந்த சில மாதங்களாக மந்த நிலையில் இருந்து வந்த வாகன விற்பனைகள் மீண்டும் சுமுக நிலைக்குத் திரும்பியிருக்கின்றன.
நாட்டின் தேசிய கார் நிறுவனமான புரோட்டோன் ஜூன் மாதத்தில் மட்டும் 9,623 வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. புரோட்டோன் “சாகா” இரகக் கார்கள் அதிக அளவில் விற்பனையாகியிருக்கின்றன.
கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே மாதத்தில் (ஜூன்) “சாகா” ரகக் கார்கள் அதிக அளவில் விற்பனையாகியிருக்கின்றன. ஜூன் மாதத்தில் 4,447 புரோட்டோன் சாகா ரகக் கார்கள் விற்பனையாகின. இதற்கு முன்னர் அதிக அளவில் இந்த இரகக் கார்கள் விற்பனையானது கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலாகும். அப்போது 4,275 சாகா கார்கள் விற்பனையாகின.
ஆகஸ்ட் 2014 தொடங்கி ஜூன் 2020 மாதம்தான் சாகா கார்கள் அதிக அளவில் விற்பனையான மாதமாகத் திகழ்கிறது.
அரசாங்க பொருளாதார ஊக்குவிப்பு நிதிகள், கடந்த சில மாதங்களாக கார்களுக்கான தேவைகள் முடங்கிக் கிடந்தது ஆகியவையே திடீர் கார் விற்பனை உயர்வுக்குக் காரணம் என புரோட்டோன் அறிக்கை ஒன்றில் இன்று வியாழக்கிழமை (ஜூலை 2) தெரிவித்தது.
இதன் காரணமாக புரோட்டோனும் பயன் அடைந்தது. மொத்த வாகன விற்பனை சந்தையில் 66.4 விழுக்காட்டை உள்நாட்டுக் கார்கள் கைப்பற்றின என்றும் புரோட்டோன் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
புரோட்டோன் சாகா இரகக் கார் அறிமுகம் கண்டு 35-வது ஆண்டு நிறைவு காணும் நிலையில் தொடர்ந்து அந்தக் காருக்கான தேவையும் வரவேற்பும் அதிகமாகவே இருந்து வருகிறது.
எஸ்யுவி எனப்படும் ஸ்போர்ட்ஸ் (SUV) இரகக் கார்கள் விற்பனையிலும் புரோட்டோன் எக்ஸ்70 (Proton X70) முன்னணி வகிக்கிறது. ஜூன் மாதத்தில் மட்டும் 1,909 இந்த இரகக் கார்கள் விற்பனையாகின.
2020 ஆண்டின் முதல் அரையாண்டில் மற்ற எல்லா இரக எஸ்யுவி கார்களை விட புரோட்டோன் எக்ஸ் 70 அதிக அளவில் விற்பனையாகின.