சென்னை: அண்மையில் பெண் பொறியியலாளர் சுபஸ்ரீ என்பவர் தனது இருசக்கர வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது சாலையோரமாக வைக்கப்பட்டிருந்த அரசியல் விளம்பர பதாகை அவர் மீது சாய்ந்து, அதனால் அவர் தடுமாறி கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் பின்னர் மரணமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த விளம்பரப் பதாகையை அதிமுக சார்பாக நிர்மாணித்த அதிமுக பிரமுகரான ஜெயகோபால் தலைமறைவானார். அவரது மகன் திருமணத்திற்காக சாலைக்கு இடையில் வைக்கப்பட்டிருந்த அந்த விளம்பர பதாகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் படங்களும் இடம்பெற்றுள்ளது.
பொதுமக்கள், ஊடகங்களிடையே இந்த சம்பவம் கடும் அதிருப்தியையும், கண்டனங்களையும் தோற்றுவித்தது. எனினும் பதாகையை வைத்த முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் (கவுன்சிலர்) ஜெயகோபாலைக் காவல் துறையினர் இதுவரை கைது செய்யாமல் இருந்தது, ஆளும் அதிமுக அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றமும் கண்டனம் தெரிவிக்க ஜெயகோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரைத் தேடும் பணியில் தனிப்படை அமைத்து தமிழகக் காவல் துறை ஜெயகோபாலை வலைவீசித் தேடி வந்தது.
இன்று வெள்ளிக்கிழமை கிருஷ்ணகிரியில் தேன்கனிக் கோட்டை என்ற இடத்தில் ஒரு தங்கும் விடுதியில் தலைமறைவாகத் தங்கியிருந்த ஜெயகோபாலை காவல் துறையினர் கைது செய்தனர்.