சென்னை: சமீபக் காலமாக தமிழ் திரைப்படங்களுக்கு எதிராக ஒரு சில குழுக்கள் ஏதாவது ஒரு காரணத்தை முன்நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில், தற்போது நடிகர் கார்த்தி நடித்துக் கொண்டிருக்கும் ‘சுல்தான்’ திரைப்படத்திற்கும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மலைக்கோட்டையில் நடைபெற்று வந்தது. அவ்விடத்திற்கு வந்த இந்து முன்னணி, சிவசேனா உள்ளிட்ட அமைப்பினர் படப்பிடிப்பை நடத்தக் கூடாது என்றும் ‘சுல்தான்’ தலைப்பு குறித்து கேள்வி எழுப்பி பிரச்சனையும் செய்துள்ளனர். அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு படக்குழுவினர் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படம் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டு உருவாகப்படவில்லை என்று படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். இது வரலாற்றுப் பின்னணியோ அல்லது திப்பு சுல்தான் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படமோ அல்ல என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளானர்.
“திரைப்படங்களை நிறுத்துவதற்கும் தடை செய்வதற்கும் தணிக்கைக் குழு உள்ளது. இது தவிர்த்து என்ன காண்பிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை அந்த திரைப்படத்தின் படைப்பாளிகளுக்கே உள்ளது. இது நம் நாட்டின் சட்டம் நமக்கு அளிக்கும் சுதந்திரமும், பாதுகாப்பும் ஆகும்.” என்று டிரிம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுளது.
சுல்தான் படத்தினை ‘ரெமோ‘ திரைப்பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.