வாஷிங்டன் – சீனாவுக்கு எதிரான வணிகப் போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் முயற்சியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம் அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் சீனாவின் நிறுவனங்களை அகற்ற பரிசீலனை செய்து வருகிறது.
இந்த முடிவு அமெரிக்க – சீன வணிகப் போரை உச்சகட்டத்திற்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க நிதி, பங்குச் சந்தைகள் மூலமாக சீனாவின் நிறுவனங்களுக்குச் சென்றடைவதைத் தடுக்கும் ஒரு முயற்சியாக இது கருதப்படுகிறது.
இந்தத் தகவல், ஊடகங்களில் வெளிவந்ததைத் தொடர்ந்து அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் சில நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன. இதன் காரணமாக, அமெரிக்கப் பங்குச் சந்தைகளின் புள்ளிகளும் சரிந்தன.
எதிர்வரும் அக்டோபர் 1-ஆம் தேதி சீனா தனது 70-வது குடியரசு தினத்தைக் கொண்டாடுவதை முன்னிட்டு சுமார் ஒருவார காலத்திற்கு நாடே திருவிழா கோலம் பூணவிருப்பதால், அந்த காலகட்டத்தில் சீனாவின் பெரும்பாலான வணிகங்கள் மூடப்பட்டிருக்கும். இந்த நேரத்தில் இந்தத் தகவல்கள் வெளியாகியிருப்பது சீன நிறுவனங்களுக்கு அதிர்ச்சி வைத்தியத்தைத் தந்துள்ளது.
உதாரணமாக, சீனாவின் முன்னணி இணைய வணிக நிறுவனமான அலிபாபா உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்கு விலைகள் அமெரிக்க பங்குச் சந்தையில் சரிந்தன.