கோலாலம்பூர்: அடிமை தொழில் முறையை தங்களது தொழிலாளர்களுக்கு எதிராக பயன்படுத்தியதாக நம்பப்படும் உள்ளூர் ரப்பர் கையுறை நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் இங்குள்ள அமெரிக்க தூதரகத்திற்கு விளக்கமளிக்கும் என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அடிமை தொழிலாளர்களை பயன்படுத்தி வெளியிட்ட பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாட்டை அமெரிக்கா விதித்திருந்தது.
ஒரே ஒரு மலேசிய ரப்பர் கையுறை உற்பத்தியாளர் மட்டுமே இந்த விவகாரம் தொடர்பில் தடை செய்யப்பட்டுள்ளார் என்றும், ஒட்டுமொத்தமாக ரப்பர் கையுறை தொழில் துறையே அல்ல என்பதை தெளிவுபடுத்துவார் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை, அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு (சிபிபி) அடிமை தொழிலாளர்களைப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட பின்னர் ஐந்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து வெவ்வேறு தயாரிப்புகளுக்கு திரும்பப் பெறும் உத்தரவை பிறப்பித்ததாக அறிவித்தது.
மலேசிய நிறுவனம் ஒன்று அடிமை தொழிலாளர் முறையில் ஈடுபட்டுள்ளது என்ற அடிப்படையில் உள்ளூர் ரப்பர் கையுறைகளை இறக்குமதி செய்வதும் இந்தத் தடையில் அடங்கியிருந்தது.
“அந்நிறுவனம் விசாரிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சகம், நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் மற்றும் மே மாதத்தில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது” என்று அவர் நேற்று புதன்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அடிமை தொழிலாளர்கள் முறையின் பாதகமான விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதற்கும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கும் தகுந்த நடவடிக்கைகளை அமைச்சு எடுத்துள்ளதாக குலசேகரன் கூறினார்.