கோலாலம்பூர்: தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு அமைப்புகள், துறைச் சார்ந்த நிறுவனங்கள், நாடளாவிய நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில், மலேசிய தமிழ் வானொலியான மின்னல் பண்பலை, இவ்வாண்டு தீபாவளியை ‘பசுமை தீபாவளி’ (#gogreendeepavali) எனும் கருப்பொருளைக் கொண்டு ஈப்போவில் அதன் முதல் கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாக அதன் தலைவர் சுமதி கூறினார்.
நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியில் இந்த கருப்பொருள் ஏற்கப்பட்டு, அதனை கலை நிகழ்ச்சி வழியில் மக்களுக்கு சென்று சேர்ப்பதற்கு மின்னல் பண்பலை களம் இறங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருகிற சனிக்கிழமை அக்டோபர் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஈப்போ, லிட்டல் இந்தியாவில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அறிவிப்பாளர்கள் சுகன்யா, மோகன், திரேசா, பருவிந்தராஜ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று ஒரு செய்தி அறிக்கையின் மூலம் சுமதி தெரிவித்தார்.
“தீபாவளியை இன்னும் சில வாரங்களில் கொண்டாடவிருக்கும் நாம், இந்த இயக்கத்தின் வழி, பொருட்களை வாங்கும் போது, நெகிழிப் பைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளை உபயோகப்படுத்துவது இயற்கைக்கு நாம் செய்யும் ஒரு கடமையாகும்” என்று அவர் கூறினார்.