கோலாலம்பூர்: தங்களது பணியாளர்கள் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக அதன் அசல் கட்டணத் திட்டத்தை மீண்டும் நிலைநிறுத்துமாறு புட்பாண்டா நிறுவனத்தை அமைச்சரவை வலியுறுத்தியுள்ளது என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சைட் சாதிக் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
தடையற்ற சந்தை போட்டியை அரசாங்கம் ஏற்கிறது, ஆயினும், அது தொழிலாளர்களின் நலனை பாதிக்கும் அளவிற்கு விட முடியாது என்று அவர் கூறினார்.
“இரு தரப்பினரின் கதைகளைக் கேட்டபின், நான் இன்று (நேற்று புதன்கிழமை) இந்த விவகாரத்தை அமைச்சரவைக்கு கொண்டு வந்தேன். பணியாளர்களின் நலனை உறுதி செய்வதற்காக புட்பாண்டா அதன் அசல் கட்டணத் திட்டத்தை மீண்டும் நிலைநாட்ட அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது,” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
போட்டிகள் நிறைந்த இந்த சந்தையில் ஈடுபடுபவர்களுக்கு சிறப்பான வழிகளை அரசாங்கம் தேடும் என்று சைட் சாதிக் கூறினார்.
“நீண்ட கால திட்டத்திற்காக, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு, மனிதவள அமைச்சு மற்றும் உள்நாட்டு வணிக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு, இந்த பகுதி நேர வேலைகளுக்காக ஒரு சிறப்புக் குழுவை அமைத்து அதன் பிரச்சனையை ஆழமாக ஆராய வேண்டும்.”
“முழுநேர அல்லது பகுதிநேர பணிபுரியும் இளைஞர்கள் நிறைய உள்ளனர். அவர்களின் வருமானத்திற்கு கூடுதலாக அவர்களுக்கு முழு பாதுகாப்பு தேவை. அவர்களின் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு நாங்கள் பொறுப்பேற்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.