கோலாலம்பூர் – தொடர்ந்து மகாதீர் பதவி விலகும் விவகாரம் விவாதிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டுமென அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ள பிகேஆர் தலைவர் அன்வார்இப்ராகிம், எப்போது விலகுவது என்ற முடிவை எடுப்பதற்கு மகாதீருக்கு போதிய அவகாசம் அளிப்போம் என்றும் அவருக்கு நெருக்குதல்கள் அளிக்கக்கூடாது என்றும் அவர் தனது பணிகளைத் தொடர வாய்ப்பளிப்போம் என்றும் கூறியுள்ளார்.
எல்லாப் பத்திரிகையாளர் கூட்டங்களிலும் இந்த விவகாரம் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதாகவும் அன்வார் மேலும் கூறினார்.
“அன்வார், நான் கொடுத்த வாக்குறுதியை நான் எப்போதும் மீற மாட்டேன். அதன்படி நடப்பேன். ஆனால், என்னைப் பதவி விலகுவதற்கு தேதி நிர்ணயிக்கச் சொல்லி நெருக்குதல்கள் வேண்டாம். அவ்வாறு தேதியை நான் நிர்ணயித்தால் இடைப்பட்ட காலத்தில் நான் வலுவில்லாத, ஒரு பிரதமராகக் கருதப்படுவேன் என்று அவர் என்னிடம் கூறியிருக்கிறார். அவரது கருத்தை நான் மதிக்கிறேன்” என்றும் அன்வார் கூறியிருக்கிறார்.
அடுத்த பிரதமராகப் பதவியேற்கக் காத்திருப்பவன் என்ற முறையில் எனக்கும் மகாதீருக்கும் இடையில் பதவி மாற்றம் குறித்த எழுத்துபூர்வமான ஒப்பந்தம் இருக்கிறது என்றும் கூறிய அன்வார், தனக்கும் மகாதீருக்கும் இடையில் எந்தவிதப் பிரச்சனையும் இல்லை என்றும் ஆனால் எங்கள் இருவரின் ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கின்றனர் என்றும் அன்வார் தெளிவுபடுத்தினார்.
நேற்று புதன்கிழமை நடைபெற்ற கேள்வி-பதில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அன்வார் இவ்வாறு கூறினார்.