Home நாடு அமரர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்களின் அரசியல் பங்களிப்பு – நினைவஞ்சலி

அமரர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்களின் அரசியல் பங்களிப்பு – நினைவஞ்சலி

1407
0
SHARE
Ad

(இன்று அக்டோபர் 12 மஇகாவின் 6-வது தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டான்ஸ்ரீ டத்தோ வி.மாணிக்கவாசகம் அவர்கள் மறைந்த நாள். 1979-ஆம் ஆண்டு மறைந்த அவரது அரசியல் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் எழுதிய இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது. மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவரும் துணை அமைச்சருமான டான்ஸ்ரீ டத்தோ க.குமரன் அவர்களின் முயற்சியில் தமிழவேள் கோசா அறவாரியம் சார்பில் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட “தான்சிறீ வெ.மாணிக்கவாசகம்” என்ற நூலில் இந்தக் கட்டுரையும் இடம் பெற்றிருந்தது. அதனை செல்லியல் வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்கிறோம்)

1973-ஆம் ஆண்டு முதல் 1979-ஆம் ஆண்டுவரை மிகக் குறுகிய காலத்திற்கே மஇகா தேசியத் தலைவராக இருந்தாலும், டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் அரசியல் பங்களிப்பு மிகப் பிரம்மாண்டமானதாகவும், மிக விரிவானதாகவும் இருந்ததோடு, இன்றுவரை அதன் தாக்கங்கள் மஇகாவிலும், இந்திய சமுதாய அரசியலிலும், இந்திய சமூகத்தின் கூட்டுப் பொருளாதார நடவடிக்கைகளிலும்  மிக ஆழமாகப் படிந்திருப்பதை நாம் காணலாம்.

டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் முகப்பு

மலேசிய இந்திய சமுதாயத்தில் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் ஏற்படுத்திய அரசியல் அதிர்வுகளை, உருமாற்றங்களை அவர் வழங்கிய பங்களிப்புகளை சுருக்கமாகப் பின்வருமாறு மூன்று தளங்களில் பிரிக்கலாம்:

  1. மஇகாவில் ஏற்படுத்திய உட்கட்சி சீர்திருத்தங்கள்
  2. மஇகாவைக் கொண்டு மலேசிய இந்திய சமுதாயத்தில் அவர் ஏற்படுத்திய அரசியல் மாற்றங்கள்; மறுமலர்ச்சி.
  3. இந்திய சமுதாயத்தில் ஏற்படுத்திய பொருளாதார உருமாற்றங்கள்

1. மஇகாவில் ஏற்படுத்திய உட்கட்சி சீர்திருத்தங்கள்

#TamilSchoolmychoice

மாணிக்கா 1973-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்தபோது அவருக்கு நீண்ட காலமாக கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த அனுபவமும், அரசாங்கத்தில் துன் சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் அமைச்சராக இருந்த அரசாங்கத் துறை அனுபவமும் நிறையவே இருந்தது.

தனது 20-வது வயதிலேயே அவர் மஇகாவில் அமைக்கப்பட்ட இரண்டாவது கிளையான கிள்ளான் மஇகா கிளையின் செயலாளராகத் தேர்வு பெற்று அரசியலில் நுழைந்திருக்கின்றார். பின்னர் 1959-ஆம் ஆண்டின் முதல் மலேசிய நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினராக கிள்ளான் தொகுதியிலிருந்து  தேர்வு பெற்றிருக்கின்றார்.

அதன்பின்னர் துணையமைச்சராகவும், 1964-ஆம் ஆண்டு முதற்கொண்டு 38-ஆம் வயதிலிருந்தே, அமைச்சராகவும் இருந்தவர், 1973-இல் கட்சிப் பொறுப்பை ஏற்றபோது அவருக்கு வயது 47 தான். எனவே அவருக்கு இருந்த அனுபவங்களைக் கொண்டு கட்சியிலும், சமுதாயத்திலும் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்த ஒரு தெளிவான சிந்தனையும், தூரநோக்குப் பார்வையும் இருந்தது.

மாணிக்காவின் தலைமைத்துவ ஆற்றல்களில் மிக முக்கியமான வித்தியாச அம்சமாக நம் கண்ணுக்குத் தெரிவது அவர் முன்னெடுத்த ஒவ்வொரு நடவடிக்கையிலும் அவருக்கு ஒரு தூரநோக்கு சிந்தனை இருந்தது என்பதுதான். மக்களிடையே புகழ் பெறுவதற்காகவோ, கட்சியில் தனது குடியிருப்பை நீட்டிப்பதற்காகவோ அவர் முடிவுகள் எடுத்தவரல்ல. அந்த காலகட்டத்தில் மஇகாவை சரியான பாதைக்கு, திசைக்கு திருப்பி விட வேண்டும் என்ற வேட்கையோடு அவர் செயல்பட்டார்.

ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் மட்டுமே அவர் தேசியத் தலைவராக இருந்து மிக இளம் வயதிலேயே – தனது 53வது வயதிலேயே – அவர் காலமாகி விட்டார். எனினும் அந்த ஆறு ஆண்டுகளுக்குள் அவர் முன்னெடுத்த திட்டங்கள், வகுத்த கொள்கைகள், கட்சியில் கொண்டு வந்த நிர்வாக மாற்றங்கள் – ஆகியவற்றை பாரபட்சமின்றி ஆராய்ந்தால் அவை நமக்கு பிரமிப்பு ஊட்டுகின்றன.

கட்சி நிர்வாக, சட்டவிதித் திருத்தங்கள்

மாணிக்கா பதவியேற்றவுடன் முதல் பணியாக, கட்சியில் மஇகா சட்டவிதிகளில் மாற்றங்களை உருவாக்கி, அதன்வழி மஇகாவில் உட்கட்சி நிர்வாக சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து, மிகப் பெரிய அரசியல் உருமாற்றத்தை கட்சிக்குள் ஏற்படுத்தினார். கட்சிக்கு அவர் வழங்கிய மிகப் பெரிய பங்களிப்பாக – அவை கட்சிக்குள் ஆழ ஊடுருவி இன்றுவரை தொடர்ந்து அழுந்தப் படிந்திருப்பதை நாம் காணலாம்.

அவர் பதவியேற்றதும், முறையான நிர்வாகச் செயலாளர், தலைமைச் செயலாளர் போன்ற பொறுப்புகளைக் கொண்டு மஇகா தலைமையகத்தின் அலுவலக நிர்வாகத்தை அவர் கட்டமைத்தார்.

மஇகாவின் அமைப்பு சாசன விதிகள் (MIC Constitution) வழக்கறிஞர்களைக் கொண்டு முறையாகத் திருத்தங்கள் செய்யப்பட்டுத் தொகுக்கப்பட்டன. மஇகாவுக்கு என தேர்தல் நடைமுறைகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய பதவிகள், தலைமைத்துவ வரிசைகள் உருவாக்கப்பட்டன.

புதிய சட்டவிதித் திருத்தங்கள் தேசியத் தலைவருக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்குகின்றன என்ற குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், கட்சிக் கட்டுப்பாட்டுக்காகவும், ஒழுங்கான, நடைமுறைகளை அமுல்படுத்தவும் அவை தேவையாயிருந்தன என்பதும், இன்றுவரை அடுத்து வந்த தேசியத் தலைவர்கள் அந்த விதிமுறைகளைப் பின்பற்றித்தான் கட்சியை வழிநடத்தி வந்தனர் என்பதிலிருந்தும் மாணிக்காவின் தூர நோக்கு சிந்தனையை – ஏன் அவர் தேசியத் தலைவருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கினார் – என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் தனக்கிருந்த தேசியத் தலைவருக்கான அதிகாரங்களைக் கொண்டு அவர் தனது பதவிக் காலத்தில் தவறான முடிவுகள் எடுக்கவுமில்லை. சர்வாதிகாரத்தின் எல்லையைத் தொடவுமில்லை. யாருடையை அரசியல் வளர்ச்சியையும், ஆதிக்கத்தையும் ஒழித்துக் கட்டவும் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஓர் அம்சம்.

குறிப்பாக கட்சியில் அவர் மேற்கொண்ட நிர்வாக நடைமுறைகள் இன்றுவரை கடைப்பிடிக்கப்படுகின்றன. கிளைகள் முறையாக அமைக்கப்பட்டு, அவற்றின் உறுப்பினர் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு ‘பி’ பாரம் என்ற உறுதிச் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே ஆண்டுக் கூட்டங்கள் நடத்த முடியும் என்ற நடைமுறை இன்றுவரை கட்சியில் பின்பற்றப்படுகின்றது. மாணிக்கா அறிமுகப்படுத்திய நடைமுறை இதுவாகும்.

மஇகாவுக்குப் புதிய தலைமையகக் கட்டடம்

இன்றும் மஇகாவினர் முழுமையாகப் பயன்படுத்தி வரும் மஇகா தலைமையகக் கட்டடத்தை நிர்மாணித்தவர் அவர் என்பது அவரது மற்றொரு சாதனை.

கட்சியின் துணைத் தலைவராக இருந்த காலத்தில், மஇகா கட்டடக் குழுத் தலைவராகவும் பொறுப்பேற்று, அந்தக் காலத்திலேயே கணிசமான நன்கொடைகள் திரட்டி, ஏழு மாடிகள் கொண்ட மஇகா கட்டடத்தைப் புத்தம் புதியதாக அவர் 1969-ஆம் ஆண்டிலேயே மஇகாவுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் நிர்மாணித்தார்.

கட்சியின் நடவடிக்கைகளுக்கென சொந்தக் கட்டடம் தேவை என்பதை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட்ட அவர் அந்தக் காலத்தில் மஇகா தலைமையகக் கட்டடத்தை நிறுவியபோது, அதற்கு இணையாக அம்னோ, மசீச கட்டடங்கள் கூட அப்போது இருந்ததில்லை எனக் கூறுவார்கள்.

48 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே தலைமையகக் கட்டடத்தில்தான் மஇகா இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதே அவரது தூரநோக்கு சிந்தனைக்கு சிறந்ததொரு உதாரணமாகும்.

அது மட்டுமல்ல, இன்றைக்கு அந்தந்த மாநிலத் தலைநகர்களின் மையப் பகுதிகளில் கம்பீரமாக வீற்றிருக்கும் பல மாநில மஇகா தலைமையகக் கட்டடங்கள், மற்றும் நாடு தழுவிய நிலையில் கட்சிக்குச் சொந்தமாக இருக்கும் நிலங்களில் பெரும்பான்மையானவை அவர் காலத்தில் அவரது முயற்சியால் பெறப்பட்டவை என்பதும் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும் (உதாரணம்: பேராக், ஜோகூர்).

நாட்டின் பல பகுதிகளில் மஇகா சார்பாக நிலம் ஒதுக்கீடு செய்யச் சொல்லி மாநில அரசாங்கங்களை அவர் வற்புறுத்தி பெற்றுத் தந்தார்.

இன்றைக்கு மஇகா பல கட்டடங்களையும், நிலங்களையும், சொத்துகளையும் கொண்டு, பொருளாதார ரீதியில் வலுவான கட்சியாக வளர்ச்சி பெற்றிருப்பதற்கு வித்திட்டவர்- அவ்வாறு பொருளாதார வலிமை இருந்தால்தான் கட்சி அரசியல் வலிமையும் பெறும் என்பதையும் அன்றே திட்டமிட்டு செயலாற்றியவர் மாணிக்கா.

புதிய, இளைய தலைமைத்துவத்தை உருவாக்கியது

கட்சியில் மாணிக்கா ஏற்படுத்திய மற்றொரு முக்கிய உருமாற்றம், 1970-ஆம் ஆண்டுகளில் இருந்த தேவைகள் – நிலைமைகளுக்கு ஏற்ப, புதிய இளந் தலைமுறை வரிசை ஒன்றை உருவாக்கி கட்சிக்குள் கொண்டு வந்ததுதான்.

கட்சிக்குள் ஏற்கனவே பதவியில் இருந்தவர்களை மட்டும் கொண்டு அரசியல் நடத்தும் அணுகுமுறையைக் கைவிட்டு, புதியவர்களை, படித்த பட்டதாரி இளைஞர்களை அவர்களின் தலைமைத்துவ ஆற்றலை அடையாளங் கண்டு கட்சியிலும் அரசாங்கத்திலும் முக்கியப் பதவிகளில் அவர் அமர்த்தினார். இதுவும் மாணிக்காவின் மற்றொரு துணிச்சலான, தூரநோக்கு சிந்தனையாகும்.

அதையும் அவர், தான் தேசியத் தலைவரானவுடன் சந்தித்த முதல் பொதுத் தேர்தலிலேயே துணிச்சலுடன் செயல்படுத்திக் காட்டினார்.

அவ்வாறு அவர் 1974 பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அறிமுகப்படுத்திய துன் சாமிவேலு, டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம், டத்தோ கு.பத்மநாபன் ஆகிய மூவரும் அடுத்த 30 ஆண்டுகளுக்கு மஇகாவிலும், இந்திய சமுதாயத்திலும் முக்கிய ஆளுமைகளாகத் திகழ்ந்தார்கள் என்பதிலிருந்து அவரது தூரநோக்குப் பார்வையையும், சிறந்த தலைமைத்துவ ஆற்றல்களை அடையாளம் காணும் மாணிக்காவின் திறனையும் நான் உணர்ந்து கொள்ள முடியும்.

எந்த அரசியல் பின்புலமும் இல்லாத டான்ஸ்ரீ சுப்ராவை மலாயாப் பல்கலைக் கழக மாணவராக இருந்தபோதே, அவரது திறமைகளுக்காக அடையாளம் கண்டு அவரைக் கட்சியின் நிர்வாகச் செயலாளராகவும், பின்னர் தலைமைச் செயலாளராகவும் நியமித்து, 1974-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட வைத்தார். அப்போது அவருக்கு வயது 30.

அரசாங்க சேவையில் இருந்த டத்தோ பத்மநாபனின் ஆற்றலையும், அறிவுத் திறனையும் அடையாளம் கண்டு,  எந்தக் கட்சிப் பதவி இல்லாத அவரையும் தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வைத்தார்.  பத்மாவுக்கு அப்போது வயது 37தான்.

அதே வேளையில் கட்சியில் உதவித் தலைவராக மிகவும் துடிப்பாக கட்சிப் பணிகளை ஆற்றிக் கொண்டிருந்த (துன்) சாமிவேலுவுக்கும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார். தனது 38-வது வயதில் நாடாளுமன்றத்தில் நுழைந்தார் சாமிவேலு.

புதியவர்களை, இளைஞர்களைக் கட்சிக்குள் கொண்டுவந்த மாணிக்காவின் இத்தகைய முடிவுதான் கட்சிக்குள் அவருக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தோற்றுவித்தது, நாளடைவில் உட்கட்சிப் போராட்டங்கள் உருவாகக் காரணமாக அமைந்தது என்றாலும், காலம் அவரது முடிவு சரியானதுதான் என்பதையும் நிரூபித்தது.

சுப்ரா, பத்மா இருவரைத் தவிர்த்து மேலும் பல பட்டதாரிகளுக்கு மஇகாவின் கதவுகளைத் திறந்து விட்டு, அவர்களுக்குப் பொறுப்புகளும் வழங்கியிருக்கிறார் மாணிக்கா.

இன்றும் நம் தலைவர்கள், படித்தவர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள், புதியவர்கள் கட்சிக்குள் வந்து சேவையாற்ற வேண்டும் என முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதை அன்றே செயல்படுத்திக் காட்டியவர் மாணிக்கா.

கட்சியில் கடைப்பிடித்த ஜனநாயகப் பண்புகள்

புதிய சட்டவிதிகளைக் கொண்டு, அதிகார பலத்தோடு அவர் மஇகாவை நடத்தி வந்தாலும், சர்வாதிகாரம் என்ற எல்லையைத் தொடாமல், கட்சிக்குள் ஜனநாயகப் பண்புகளைக் காத்தார் – கடைப்பிடித்தார் – என்பதை நாம் காணலாம்.

நாம் முன்பு கூறியபடி புதியவர்களைக் கட்சிக்குள் கொண்டுவந்தாலும், அவர்களுக்கு பதவிகள் வழங்கினாலும், கட்சியில் பழையவர்களை, பாரம்பரியமாக சேவையாற்றி வந்தவர்களை அவர் ஒதுக்கியதே இல்லை.

குறிப்பாக, அவருக்கு அன்றைக்கிருந்த செல்வாக்கு, அதிகாரம், ஆதரவு பலம் ஆகியவற்றைக் கொண்டு மிக எளிதாக, தனக்குப் பிடிக்காத ஒருவரை அவர் கட்சியிலிருந்து நீக்கியிருக்கலாம் – ஒதுக்கி வைத்திருக்கலாம்.

ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை! கட்சியிலிருந்து ஒருவரை நீக்கி, அதன்மூலம் அவரது அரசியல் வாழ்க்கையை முடிக்கும் அரசியல் அணுகுமுறையை அவர் இறுதிவரை கடைப்பிடிக்கவில்லை.

கட்சியிலிருந்து ஒருவரை விலக்கி வைக்கும் கட்டாயம் ஏற்பட்டாலும், மூன்று மாதங்கள், ஆறுமாதங்கள் வரைதான் இடைநீக்கம் செய்திருக்கிறார் மாணிக்கா. ஓரிருமுறைதான் ஒரு சிலரை ஓராண்டு வரை இடைநீக்கம் செய்திருக்கிறார்.

மற்றொரு உதாரணமாக, டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலுவுடன் மாணிக்காவுக்கு பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், 1974-ஆம் ஆண்டில் சுங்கை சிப்புட் தொகுதி நாடாளுமன்றத்திற்கு அவரையே வேட்பாளராக நிறுத்தினார். 1978-ஆம் ஆண்டில் சாமிவேலுவை துணையமைச்சராக நியமித்தார்.

மாணிக்காவுக்கு எதிராக சாமிவேலு பகிரங்கமாக அரசியல் பிணக்கு கொண்டிருந்தாலும், கட்சியில் ஒவ்வொரு நிலையிலும் சாமிவேலு ஜனநாயக ரீதியாகப் போட்டியிட்டு, வென்று வர முடிந்தது என்பதிலிருந்து, மாணிக்கா கடைப்பிடித்த ஜனநாயகப் பண்பை நாம் உணர்ந்து கொள்ளலாம். அவ்வாறு வென்று வந்த பின்னரும் சாமிவேலுவுக்கு உரிய இடத்தையும், பொறுப்பையும் அவர் அளிக்கத் தவறியதே இல்லை. ஏற்றுக் கொண்டார்.

1977-ஆம் ஆண்டில் மாணிக்காவின் நெருங்கிய ஆதரவாளரான சுப்ராவைப் போட்டியிட்டு தோற்கடித்து கட்சியின் துணைத் தலைவரான சாமிவேலுவை 1978-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் துணையமைச்சராக நியமித்தார்.

1979-ஆம் ஆண்டில், அதே மாணிக்காவின் தலைமைத்துவத்தில்தான்  சாமிவேலு கட்சியின் தேசியத் துணைத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக மரபும் அரங்கேறியது.

கட்சியில் இந்தியர்களாக அனைவரையும் அரவணைத்தார்

மஇகாவின் அரசியல் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், மாணிக்காவின் காலகட்டத்தில் இந்திய சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் இன, சமய பேதமின்றி, மஇகாவில் ஒன்றிணைந்து பணியாற்றியிருப்பதைக் காணலாம்.

மாணிக்காவுக்கு நெருக்கமானவராக இருந்த டான்ஸ்ரீ உபைதுல்லா, ஒரு முஸ்லீமாக இருந்தாலும் கட்சியின் தேசிய உதவித் தலைவராக இருந்தார் என்பதோடு, நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற மேலவையின் துணைத் தலைவராகவும் இருந்தார். ஒரு மலையாளியாக இருந்தாலும், டத்தோ பத்மாவுக்கு கட்சியில் பதவிகளும், அமைச்சுப் பொறுப்புகளும் தந்து, அவரது திறன்களைப் பயன்படுத்திக் கொண்டார் மாணிக்கா.

பகாங் மாநிலத்தின் தலைவராக வி.வி.அபு என்ற கேரள முஸ்லீம் தலைவர் ஜனநாயகப் போட்டியின் வழி தேர்ந்தெடுக்கப்பட்டதும் மாணிக்காவின் காலத்தில்தான்.

இவ்வாறு கிளை, மாநில, தேசிய அளவில் நிறைய உதாரணங்களைக் கூறலாம். மஇகா இந்தியர்களுக்கான கட்சி என்பதிலும், பாகுபாடு இன்றி அனைவரும் அரவணைக்கப்பட வேண்டும் என்பதிலும் மாணிக்கா தெளிவாக இருந்தார். ஒருவரின் திறன்களையும், ஆற்றலையும் அவர் கட்சிக்குள் பயன்படுத்திக் கொண்டபோது அந்நபரின் பின்புலத்தையோ, இன, மதப் பின்னணியையோ அவர் பார்த்தவரில்லை.

மஇகாவின் மூலம் சமுதாயத்தில் ஏற்படுத்திய அரசியல் மாற்றங்கள்

மஇகாவுக்குள் இவ்வாறு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு கட்சியை வலுவாக்கி நிமிர்த்தியவர் அந்தக் கட்சிக்கும் சமுதாயத்திற்கும் இடையிலான பிணைப்பையும், நெருக்கத்தையும் மேலும் வலுவாக்கினார்.

அவரது காலகட்டத்தில் ஏறத்தாழ அனைத்து இந்தியர்களும் மஇகாவில் உறுப்பினர்களாக இருந்தனர். பேராக்கில் இயங்கிய பிபிபி கட்சியின் தலைவர்களாக டி.ஆர்.சீனிவாசகம் சகோதரர்கள் இருந்த காரணத்தால், அந்த மாநிலத்தில் பல இந்தியர்கள் பிபிபி கட்சியின் பின்னால் அணிவகுத்து நின்றனர். இந்தியர்களில் சில தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளும், வழக்கறிஞர்களும் ஜனநாயக செயல்கட்சியில் இணைந்து அரசியல் நடத்தினர். இவர்களைத் தவிர, வேறு எந்த அரசியல் அமைப்பையும், கட்சியையும் இந்தியர்கள் நாடாமல் இருக்கும் வண்ணம் அனைத்து இந்திய சமுதாயத்தினரும் மஇகாவுக்குள் ஐக்கியமாக அவர் பாடுபட்டார்.

அனைத்து இந்தியர்களையும் மஇகா உறுப்பினர்களாக்கினார்

ஒரே ஒரு சம்பவத்தின் மூலம், அவர் எவ்வாறு ஜனநாயக ரீதியாக, அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் வண்ணம் மஇகாவை நடத்தினார் என்பதை நாம் காணலாம்.

முடக்கப்பட்டிருந்த கோலாலம்பூரிலுள்ள மஇகா செந்துல் கிளையை மீண்டும் செயல்படுத்த 1978-ஆம் ஆண்டில் அவர் உத்தரவிட்டிருந்தார். அப்போது செந்துல் வட்டாரத்திலேயே ஒரே ஒரு மஇகா கிளைதான் இருந்தது. செந்துல் மஇகா கிளை மீண்டும் திறக்கப்படுகிறது என்ற அறிவிப்புகளும் துண்டுப் பிரசுரங்களும் செந்துல் வட்டாரம் முழுவதும் விநியோகிக்கப்பட்டன.

சுமார் இரண்டு வாரங்கள் செந்துல் தமிழ்ப் பள்ளியில், மாலை வேளைகளில் உறுப்பினர் பதிவு நடைபெற்றது. செந்துல் வட்டாரத்தில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் அங்கு சென்று, தங்களின் அடையாள அட்டையைக் காட்டி, 4 வெள்ளி செலுத்தி உறுப்பினராகிக் கொள்ளலாம்.

அவ்வாறு யாரும் என்னை அணுகாமல், கட்சியில் சேரச் சொல்லாமல், நானே 4 ரிங்கிட் செலுத்தி, ஆர்வத்துடன் உறுப்பினராகி மஇகாவில் சேர்ந்தவன்தான் நான் என்பதை இந்த வேளையில் நினைவுகூர்ந்து குறிப்பிட விரும்புகிறேன்.

உறுப்பினர் சேர்க்கை நிறைவடைந்தபோது, சுமார் ஆயிரம் பேர் உறுப்பினர்களாக செந்துல் மஇகாவில் இணைந்தனர். அவர்களைக் கொண்டு ஆண்டுக் கூட்டம் நடத்தப்பட்டு, முறையான தேர்தலும் நடத்தப்பட்டு, புதிய செந்துல் கிளைக்குத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நினைத்துப் பாருங்கள்! நமது மக்கள் தொகை பன்மடங்கு அதிகரித்து விட்டாலும், இன்றும் 50 பேரைத் திரட்டி ஆண்டுக் கூட்டம் நடத்த மஇகா கிளைகள் சிரமப்படுகின்றன. ஆனால், அன்று பகிரங்க உறுப்பினர் சேர்க்கை முறையைக் கடைப்பிடித்த காரணத்தால், 39 ஆண்டுகளுக்கு முன்பே ஒரே கிளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டிருக்கிறது. இதுபோன்று நாடு முழுக்க பல கிளைகள் செயல்பட்டன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மாணிக்காவின் இதுபோன்ற அணுகுமுறைகளால்தான் கட்சிக்கும் இந்திய சமுதாயத்திற்கும் இடைவெளியின்றி மிக நெருக்கமான சூழல் நிலவி வந்தது.

சமூக இயக்கங்களோடு தொடர்பு

மஇகாவைத் தளமாகக் கொண்டு மாணிக்கா சமுதாயத்தில் மேற்கொண்ட மற்றொரு குறிப்பிடத்தக்க சமுதாய மாற்றம், அரசு சார்பற்ற இந்திய இயக்கங்களோடு இணைந்து பணியாற்றத் தொடங்கியது. மஇகா அரசியல் கட்சி மட்டுமல்ல, மலேசிய இந்திய சமுதாயத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதி என்பதில் தெளிவாக இருந்த அவர், மணிமன்றங்கள், திராவிடர் கழகங்கள், இந்து சமய அமைப்புகள், ஆலயங்கள் ஆகியவற்றோடு அணுக்கமான தொடர்புகளை வளர்த்துக் கொண்டார்.

உதாரணமாக, மூத்த பத்திரிக்கையாளர் எம்.துரைராஜ் மலேசியத் தமிழ்  எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தபோது, அந்த சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாணிக்க, மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கென ஓர் அறக்கட்டளை ஏற்படுத்துங்கள், அதற்காக மஇகா சார்பில் 10 ஆயிரம் வெள்ளி வழங்குகிறேன் என அறிவித்தார்.

இளைஞர் மணிமன்றத்தின் முன்னாள் தேசியத் தலைவரும், எழுத்தாளருமான அமரர் சா.ஆ.அன்பானந்தன் போன்றவர்களின் நூல் வெளியீடுகளிலும் கலந்து அவர் சிறப்பு செய்திருக்கிறார். அதன்மூலம், தமிழ் எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழாக்களுக்கு மஇகா தலைவர்கள் கலந்து கொண்டு ஆதரவளிக்கும் சிறந்த பாரம்பரியத்தை, அன்றே முன்னுதாரணமாகத் தொடக்கி வைத்தவர் மாணிக்கா.

தோட்டத் தொழிலாளர் வீட்டுடமைத் திட்டம்

மாணிக்கா சமுதாய ரீதியில் ஏற்படுத்திய பல மாற்றங்களில், அணுகுமுறைகளில், நாம் ஆச்சரியத்தோடு கவனிக்க வேண்டியது, அவருக்கிருந்த தூரநோக்கு சிந்தனை.

தோட்டத் துண்டாடல் காரணமாக துன் சம்பந்தனால் உருவாக்கப்பட்ட  தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தில் அவரது பங்களிப்பு இருந்தாலும், அரசியல் காரணமாக அந்த இயக்கத்தில் மாணிக்கா தொடர்ந்து இயங்க முடியவில்லை.

இருப்பினும் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனைகளை வேறொரு கோணத்தில் சிந்தித்தார் அவர். ஆண்டாண்டு காலமாக, தோட்டத்திலேயே குடியிருந்து, அந்தத் தோட்டத்தின் செழுமைக்காக, மேம்பாட்டுக்காக உழைத்து உருக்குலைந்தாலும், தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டுடமையோ, நில உடமையோ வழங்கப்படுவதில்லை என்பதை உணர்ந்து, தோட்டத் தொழிலாளர் வீட்டுடமைத் திட்டத்தின் வடிவமைப்பை, டத்தோ பத்மாவின் சிந்தனைத் திறனைக் கொண்டு உருவாக்கினார் மாணிக்கா.

அப்போதைய பிரதமர்கள் துன் ரசாக், அவருக்குப் பின்னர் பொறுப்பேற்ற துன் ஹூசேன் ஓன் ஆகியோரின் ஒத்துழைப்பால், ஒரு சில தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர் வீட்டுடமைத் திட்டங்கள் நிறைவேற்றவும் பட்டன. ஆனால், பின்னர் தொடர்ந்த மத்திய அரசாங்கத்தின் தலைமைத்துவம், தோட்ட முதலாளிகள், தோட்ட நிறுவனங்கள் தந்த நெருக்கடிகளால், அவர்கள் காட்டிய எதிர்ப்பால், தோட்டத் தொழிலாளர் வீட்டுடமைத் திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது.

இன்று திரும்பிப் பார்த்தால், தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணி செய்யும் தோட்டங்களிலேயே துண்டு நிலமோ, அல்லது வீடுகளோ அவர்களுக்கு சொந்த உரிமமாக வழங்கப்பட வேண்டும் என்று மாணிக்கா கண்ட கனவு, தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டிருந்தால், பின்னாளில் இந்தியர்கள் பலர் சொத்துடமையாளர்களாக மாறியிருப்பார்கள் – தோட்ட நிலங்களின் அபரிதமான மதிப்பு உயர்வால் பொருளாதார ரீதியாக வலுப் பெற்றிருப்பார்கள் – என்பதையும் நாம் உணரலாம்.

மேலும், இன்றைக்கு இந்திய சமுதாயத்தில் படர்ந்திருக்கும் நகர்ப்புற வறுமை இந்த அளவுக்கு பரவாமல் தடுக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் நமக்கு இன்றைக்கு இருக்கும் பல்வேறு சமூகப் பிரச்சனைகளும் இயல்பாகவே தீர்க்கப்பட்டிருக்கும்.

மாணிக்கா இந்திய சமுதாயத்தில் ஏற்படுத்திய பொருளாதார மாற்றங்கள்

எப்படி கட்சியை பொருளாதார ரீதியாக வலிமைப் படுத்த மாணிக்கா திட்டமிட்டாரோ, அதே போன்று, சமுதாயத்தையும் பொருளாதார ரீதியாக உயர்த்த சிந்தித்துச் செயல்பட்டவர் மாணிக்கா.

  • முதலாவது இந்தியர் பொருளாதாரக் கருத்தரங்கு

இந்திய சமுதாயத்தின் தேவைகள், சக்திகள், பொருளாதார நடவடிக்கைகள், திட்டங்கள் எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, நாட்டின் பொருளாதார வல்லுநர்கள், வணிக அனுபவம் வாய்ந்தவர்களைக் கொண்டு முதலில் ஒரு பொருளாதாரக் கருத்தரங்கை நடத்தினார் மாணிக்கா. அதன் மூலம் உதித்ததுதான், டத்தோ பத்மாவின் வழிகாட்டலில் மாணிக்கா உருவாக்கிய நீலப் புத்தகத் திட்டம்.

சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு 23 ஏப்ரல் 2017-ஆம் நாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மலேசிய இந்தியர்களுக்கென ‘மலேசியன் இந்தியன் புளுபிரிண்ட்’ என்ற பெயரில் இந்தியர் பெருவியூகத் திட்டத்தை அரசாங்கமே முன்னின்று செயல்படுத்தும் என அறிவித்தார்.

இன்று பிரதமர் நஜிப், மஇகா மூலம் அறிவித்த புளுபிரிண்ட் திட்டமும் மாணிக்காவின் முயற்சியில் 40 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்த நீலப் புத்தகத் திட்டத்தின் முன்னோடியாகும். இதிலிருந்தும் மாணிக்காவின் மற்றொரு தூரநோக்கு சிந்தனையை நாம் புரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்ல, அன்று மாணிக்கா அறிமுகப்படுத்திய நீலப் புத்தகத் திட்டம் அரசாங்கத்திடம் ஒரு பரிந்துரையாக முன்வைக்கப்பட்டது. அதன் உள்ளடக்கங்கள் செயல்படுத்தப்பட்டிருந்தால், இந்திய சமுதாயத்தின் அன்றைய எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டிருந்தால், இன்று நாம் எதிர்நோக்கும் பெரும்பாலான சமூக, பொருளாதார, கல்வி பிரச்சனைகளைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் – நாமும் வளர்ச்சியடைந்த சமுதாயமாக உருமாறியிருப்போம் – என்பதை உறுதியாகக் கூறலாம்.

  • நேசா பலநோக்குக் கூட்டுறவுக் கழகம்

மாணிக்காவின் அன்றைய நீலப் புத்தகத் திட்டத்தின் பரிந்துரைகள்படி, முதல் கட்டமாக நேசா கூட்டுறவுக் கழகத்தைத் தோற்றுவித்தார். தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம், தோட்டங்களை வாங்கி நிர்வகிப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, வணிகம், நில உடமை, வீட்டுமை, சொத்துடமை போன்ற மற்ற பொருளாதார அம்சங்களில் நேசா கவனம் செலுத்தும் வண்ணம் திட்டங்களைத் தீட்டினார்.

அவர் காட்டிய வழியில் நேசா இன்றைக்கு சுமார் 30 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட சொத்துக்களோடும், இலட்சக்கணக்கான உறுப்பினர்களோடும், நாடெங்கிலும் பல நில, வீட்டுடமையாளர்களை உருவாக்கியப் பெருமையோடும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

  • மஇகா யூனிட் டிரஸ்ட்ஸ்

இன்றைக்கு எந்த நாட்டின் பங்குச் சந்தை என்று எடுத்துக் கொண்டாலும் அதில் முக்கிய அங்கம் வகிப்பவை யூனிட் டிரஸ்ட் என்ற, பொதுமக்கள் அங்கம் பெறக் கூடிய, பங்கு விநியோக நிறுவனங்களாகும். ஆனால், மாணிக்கா பதவியேற்ற கால கட்டத்தில், யூனிட் டிரஸ்ட் என்பது சாதாரண மக்கள் புரிந்து கொள்ளமுடியாத ஒரு பொருளாதார வடிவமாக இருந்தது.

எனினும், இந்தியர்கள் சமுதாய ரீதியாக முதலீடு செய்ய, அவர்களைப் பங்கெடுக்கச் செய்ய சரியான தளம் இந்த யூனிட் டிரஸ்ட் நிறுவனம் என்பதை அப்போதே உணர்ந்து மஇகா மூலம் யூனிட் டிரஸ்ட்ஸ் திட்டத்தைத் தொடங்கினார் (MIC Unit Trusts). அந்தத் திட்டத்தை விளக்க நாடெங்கும் இந்தியர்களிடையே பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. அப்போதே 50 மில்லியன் ரிங்கிட் முதல் நிதியிலும், மேலும் 50 மில்லியன் ரிங்கிட் இரண்டாவது நிதியிலும் வசூலிக்கப்பட்டது.

கால ஓட்டத்தில் இந்த யூனிட் டிரஸ்ட் திட்டம் பல்வேறு காரணங்களால் செயல்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இன்று அந்த நிதி நம்மிடையே இல்லை என்றாலும், அப்போது அந்த யூனிட் டிரஸ்ட் நிதி சமுதாயத்தில் அழுத்தமான பொருளாதார மாற்று சிந்தனைகளை விதைத்தது, பலரையும் தங்களின் சேமிப்புகளை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வைத்தது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கடந்த 11 செப்டம்பர் 2017-ஆம் நாள் இந்தியர்களுக்கென 2 பில்லியன் யூனிட் டிரஸ்ட் பங்குகள் பிஎன்பி (PNB-Permodalan Nasional Berhad) மூலமாக அடுத்த ஐந்தாண்டுகளில் விநியோகிக்கப்பட கோரிக்கை வைக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் அறிவித்திருந்தார். இதிலிருந்து யூனிட் டிரஸ்ட் என்ற பொருளாதார வடிவத் திட்டம் இன்றைக்கும் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஆனால், இதே திட்டத்தை தனது சொந்த முயற்சியால், மஇகா மூலமாக, 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே சமுதாயத் திட்டமாக மாணிக்கா கொண்டு வந்தார் என்பதிலிருந்து அவரது தூர நோக்குச் சிந்தனையின் இன்னொரு கோணத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

மாணிக்காவின் சில குணநலன்கள் – அணுகுமுறைகள்

மாணிக்கா குறித்த இந்தக் கட்டுரையை நிறைவு செய்வதற்கு முன்னால், மாணிக்காவுடன் எனக்கு ஏற்பட்ட நேரடிப் பழக்கத்தின் மூலம் அவரிடம் நான் கண்ட சில குணநலன்கள் என்ன, அவரது தனிப்பட்ட மற்றும் அரசியல் அணுகுமுறைகள் எப்படி இருந்தன என்பதை சுருக்கமாக விவரிப்பது பொருத்தமாக இருக்கும் – இந்தக் கட்டுரைக்கும் வலு சேர்க்கும் – எனக் கருதுகிறேன்.

1978-ஆம் ஆண்டின் நவம்பர் மாதத் தொடக்கத்தில் மஇகா தலைமையகத்தில், அங்கு ஒரு குமாஸ்தாவாகப் பணியாற்றும் வேலைவாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது, டான்ஸ்ரீ மாணிக்கவாசகம்தான் தேசியத் தலைவர். அடிக்கடி மஇகா தலைமையக அலுவலகம் வருவார் என்பதால், மஇகா தலைமையகப் பணியாளன் என்ற முறையில் அவரைப் பல தடவைகள் சந்திக்கவும், அவரது சில குணநலன்களைத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன.

நேரக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதில் கண்டிப்புடன் திகழ்ந்தவர் மாணிக்கா. இன்று மாலை 5.00 மணிக்கு அலுவலகம் வருகிறார் என எங்களுக்கு அறிவிக்கப்பட்டால், சரியாக 5 மணிக்கு அலுவலகத்தின் உள்ளே வந்து அமர்வார். யாரிடமும் தேவையற்ற பேச்சுகள் வைத்துக் கொள்ளமாட்டார். பணியாளர்களைக் கூட எப்படி இருக்கிறீர்கள் எனக் கேட்கும் சம்பிரதாயங்களைத் தவிர்த்து வேறு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளமாட்டார். அவர் எதையாவது நிர்வாக ரீதியில் செயல்படுத்த நினைத்தால் அதற்கான உத்தரவு தலைமைச் செயலாளர் அல்லது நிர்வாகச் செயலாளர் மூலமாகவே வழங்கப்படும்.

தன்னைச் சந்திக்க வரும் கிளைத் தலைவர்களை மிகவும் மரியாதையாக நடத்துவார். ஒரு முறை இ.லோகநாதன் என்ற பிரபலமான மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலக் கிளை ஒன்றின் தலைவர் அவரை தேசியத் தலைவர் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்டார். அதற்குப் பின்னர் சில மாதங்கள் கழித்து மாணிக்காவைச் சந்திக்க மஇகா தலைமையகம் வந்து காத்திருந்தார் இ.லோகநாதன். அலுவலகம் வந்த மாணிக்கா தனக்காக காத்திருந்த அவரைப் பார்த்து “வாங்க மிஸ்டர் லோகநாதன் எப்படி இருக்கீங்க?” என அனைவரின் முன்னிலையிலும் மரியாதையுடன் விளித்து, தனது அறைக்குள் அழைத்துச் சென்று சந்தித்தார்.

அதட்டியோ, குரலை உயர்த்தியோ, யாரையும் நிந்தித்துப் பேசாமல், கட்சியை வழிநடத்தினாலும், அவரது ஆளுமை, தலைமைத்துவ பண்பு, கண்டிப்பு, மஇகாவினருக்கு அவர் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது.

1979-ஆம் ஆண்டின் மஇகா தேசியப் பொதுப் பேரவையை, கட்சித் தேர்தலோடு அவர் கண்டிப்புடனும், ஜனநாயக ரீதியிலும் நடத்திய விதமும், பொதுப் பேரவையில் அவர் நிகழ்த்திய உரைகளும், அருகிலிருந்து பார்த்தவன் என்ற முறையில் இன்னும் அவை என் மனக் கண்ணில் மறையாமல் நிற்கின்றன.

அவர் நடத்திய அந்த மாநாட்டில் பேராளர்கள் சுதந்திரமாகத் தங்களின் கருத்துகளைத் தெரிவித்தனர். பல காரணங்களால் 1979 ஜூன் மாதம் நடைபெற்ற மஇகா தேசியப் பேரவை வரலாற்று சம்பவமாக மஇகாவின் அரசியல் பாதையில் பதிந்தது.

மாணிக்கா தேசியத் தலைவராக இருந்து நடத்திய கடைசிப் பேரவை அது என்பதோடு, அந்த மாநாட்டில்தான் மஇகா தேசியத் துணைத் தலைவராக டத்தோஸ்ரீ ச.சாமிவேலு மீண்டும் துணைத் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம், அமரர் டத்தோ கு.பத்மநாபன், அமரர் டான்ஸ்ரீ ஜி.பாசமாணிக்கம் ஆகிய மூவரும் தேசிய உதவித் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதுவரையில் கட்சியின் தலைமைச் செயலாளராக இருந்த சி.சுப்ரமணியம், உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக டான்ஸ்ரீ மகாலிங்கம் தலைமைச் செயலாளராக மாணிக்காவால் நியமிக்கப்பட்டார்.

அந்த மாநாட்டில்தான் வழக்கறிஞர் டி.பி.விஜேந்திரன், கெர்லிங் வழக்கு பிரபலத்தால், முதலாவது மத்திய செயலவை உறுப்பினராக அதிக வாக்குகளில் தேர்வு பெற்று மஇகா அரசியலில் நுழைந்தார்.

இத்தகைய தலைமைத்துவ மாற்றங்களுக்கு, ஒரு புதிய தலைமைத்துவ வரிசைக்கு வித்திட்ட – 1979-ஆம் ஆண்டு மஇகா தேசியப் பேரவை நடந்து சுமார் மூன்றே மாதங்கள் கழிந்து, 12 அக்டோபர் 1979-ஆம் நாள் மாணிக்கா மறைந்தார்.

அவர் மறைவுக்குப் பின்னரும் அடுத்து வந்த 25 ஆண்டுகளுக்கு கட்சியில் அவர் கடைசியாக விட்டுச் சென்ற தலைமைத்துவ வரிசைதான் மஇகாவின் தலைமைப் பதவிகளில் இருந்தது என்பதிலிருந்தும், அவர்கள்தான் முக்கிய அரசியல் ஆளுமைகளாக கட்சியையும், இந்திய சமுதாயத்தையும் வழிநடத்தி வந்தார்கள் என்பதிலிருந்தும் மாணிக்காவின், தலைமைத்துவங்களை அடையாளங் கண்டு ஆதரவளிக்கும் அரசியல் தூரநோக்கு சிந்தனைத் தன்மையை நாம் ஓரளவுக்கு உணர்ந்து கொள்ளலாம்.

அவரது மறைவின்போது, மஇகா தலைமையகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த என்னைப் போன்ற பணியாளர்கள் இரண்டு நாட்கள் அவரது வீட்டிலேயே இருந்து அங்கு நடைபெற்ற இறுதிச் சடங்குகளைக் காணும் வாய்ப்பையும், அவருக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களையும், அஞ்சலி செலுத்த வந்த அப்போதைய பிரதமர் துன் ஹூசேன் ஓன் முதல்  அரசாங்க அமைச்சர்கள் பலரையும், பிரமுகர்கள் பலரையும் சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றோம்.

மாணிக்காவின் தலைமைத்துவ ஆட்சிக்காலம் ஆறே ஆண்டுகள்தான் என்றாலும், அதற்கு முன்பிருந்தே மஇகாவின் ஆரம்ப கால உறுப்பினர் என்பது முதற்கொண்டு, பின்னர் பல்லாண்டுகள் துணைத் தலைவர் என்பது வரை மஇகாவின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த அவரது அரசியல் ஈடுபாடும் , தேசியத் தலைவராக அவர் முன்னெடுத்த உருமாற்றங்கள், திட்டங்கள், கட்சியில் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் ஆகியவையும் மஇகாவின் வரலாற்றுப் பக்கங்களில் என்றென்றும் நிலையாகப் பதிந்திருக்கும்.

-இரா.முத்தரசன்