கோலாலம்பூர்: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தொழிலதிபரிடமிருந்து 2 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில், முன்னாள் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் தம்மை தற்காத்து எதிர்வாதம் செய்ய அழைக்கப்பட்டுள்ளார்.
தெங்கு அட்னானுக்கு எதிரான முதன்மை முக வழக்கை அரசு தரப்பு வெற்றிகரமாக நிரூபித்துள்ளதாக, உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் சைய்னி மஸ்லான் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
68 வயதான தெங்கு அட்னான், சாய் கின் காங்கிடமிருந்து 2 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.
அந்த காசோலை தட்மன்சோரி ஹோல்டிங் செண்டெரியான் பெர்ஹாட்டின், சிஐஎம்பி வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தில் தெங்கு அட்னானுக்கு முக்கிய பங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
டாமான்சாராவில் அமைந்துள்ள சிஐஎம்பி வங்கி பெர்ஹாட்டில் கடந்த 2016 ஜூன் 14-ஆம் தேதியன்று அவர் இக்குற்றத்தைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
தண்டனைச் சட்டம் பிரிவு 165-இன் கீழ் இந்த குற்றச்சாட்டு விதிக்கப்படுகிறது. அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.