Home வணிகம்/தொழில் நுட்பம் “வாய்விட்டுச் சிரித்தலும் அன்பு காட்டுதலும் : உலகின் அதிகமாகப் பயன்படுத்தப்படும் உணர்ச்சிக் குறிகள்”

“வாய்விட்டுச் சிரித்தலும் அன்பு காட்டுதலும் : உலகின் அதிகமாகப் பயன்படுத்தப்படும் உணர்ச்சிக் குறிகள்”

931
0
SHARE
Ad

(அக்டோபர் 16 முதல் 18-ஆம் தேதி வரை அமெரிக்காவின் சந்தா கிளாரா (Santa Clara) நகரில் நடைபெறும் யூனிகோடு — ஒருங்கிணைக்கப்பட்ட உலக வரிவடிவங்களுக்கானக் குறியீட்டுமுறை — அனைத்துலக மாநாட்டை முன்னிட்டு இந்த சிறப்புக் கட்டுரை வெளியிடப்படுகிறது)

இன்று உலகம் முழுவதையும் விரல் நுனிகளில் இணைத்திருப்பது மின்னுட்ப மேம்பாட்டினால் நம் கைகளில் தவழும் திறன் கருவிகள் (smart devices). ஒவ்வொரு நிமிடத்திலும் கோடிக்கணக்கான குறுஞ் செய்திகளும், தகவல்களும் மக்களிடையே பரிமாறப்படுகின்றன. இத்தகைய தகவல் பரிமாற்றங்களில் அண்மையக் காலங்களில் முக்கிய இடம் பெற்றிருப்பவை உணர்ச்சிக் குறிகள்! (Emoji)

சொல்லவிரும்பும் செய்திகளைச் சொற்களின்வழிச் சொல்லாமல், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் குறிகளைப் பயன்படுத்தும் வழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதை அனைவராலும் பார்க்க முடிகிறது. சொல்லப்படும் செய்தி, எந்த உணர்வோடு சொல்லப்படுகிறது என்பதை இந்த உணர்ச்சிகுறிகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

#TamilSchoolmychoice

மனதில் தோன்றும் நூற்றுக்கணக்கான உணர்ச்சிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன. உலகில் தோன்றிய மொழிகளின் வரிவடிவங்களில் அடங்கியுள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் எவ்வாறு தனித்தனிக் குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளனவோ, அவ்வாறே உணர்ச்சிகளுக்கும் குறியீடுகள் வழங்கப் பட்டுவருகின்றன.

புன்முறுவல், புன்னகை, சிரிப்பு, வாய்விட்டுச் சிரித்தல், கட்டுக்கடங்காமல் சிரித்தல், உருண்டு பிரண்டு சிரித்தல் போன்ற சிரிப்புகளுக்கு மட்டும் வரையரைக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் பல உள்ளன. இதுபோலவே, நூற்றுக்கணக்கான மற்ற உணர்ச்சிகளுக்கும் குறியீடுகள் உள்ளன. உணர்ச்சிகள் மட்டுமல்லாமல் உலக மக்களின் பண்பாடுகளைக் காட்டும் சின்னங்கள், உணவு வகைகள், கட்டடங்கள, நாட்டுக் கொடிகள், பயிர்வகைகள், பழவகைகள் போன்ற பலவகையான பொருட்களுக்கும் குறிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் குறியீடுகளை வழங்குவதும் யூனிகோடு அமைப்பே!

சரி! உலகிலேயே அதிகமாகப் பயன்படுத்தப்படும் – பகிர்ந்து கொள்ளப்படும் – உணர்ச்சிக் குறிகள் எவை என்பது தெரியுமா?

புதிய உணர்ச்சிக்குறிகளைச் சேர்ப்பதற்குமுன் இதுவரைச் சேர்க்கப்பட்டக் குறிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை ஆராய்வதையும் யூனிகோடு அமைப்பு செய்துவருகிறது.

அந்த வகையில் அக்டோபர் 16 தொடங்கி, 18-ஆம் தேதி வரையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சந்தா கிளாரா மாநகரில் நடைபெறவுள்ள 43வது அனைத்துகல யூனிகோடு மாநாட்டை முன்னிட்டு உலகில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் உணர்ச்சிக் குறிகள் எவை என்ற ஆய்வின் முடிவினை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

அந்த வரிசையில் முதலிடத்தைப் பிடித்திருப்பவை இரண்டு குறிகள். ஒன்று வாய்விட்டுச் சிரிப்பதைக் குறிக்கும் உணர்ச்சிக்குறி! மற்றொன்று அன்பு காட்டுவதைக் குறிக்கும் உணர்ச்சிக் குறி.

அடிக்கடி பயன்படுத்தப்படும் உணர்ச்சிக் குறிகளை  அடையாளம் கண்டு, புரிந்து கொள்வதன் வழி எத்தகையப் பிரிவுக்கான குறிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதையும், எத்தகைய உணர்ச்சிக்  குறிகளை  அனைத்துலகப் பயன்பாட்டுக்கான குறிகளாக வகைப்படுத்துவது  போன்ற முடிவுகளையும்  யூனிகோட் மாநாடு எடுக்கும் எனவும் யூனிகோடு அமைப்பின் தலைவர் மார்க் டேவிஸ் தெரிவித்திருக்கிறார்.இந்த முயற்சியும் அவ்வளவு எளிதான ஒன்றல்ல.

காரணம் இதுவரை 136
,000 எண்ணிக்கையை எட்டியுள்ள   இந்தக் குறிகள், மின்னுட்பக் கருவிகளின் திரைகளில் நிறைந்து கிடக்கின்றன.இந்த முயற்சியில்  மின்னுட்பத் துறையில் பின்தங்கியிருக்கும் மொழிகளுக்குத்தான் யூனிகோடு அமைப்பு  முக்கியத்துவம் தருகின்றது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

இணைப்புகள்:

1. அனைத்துலக 43வது யூனிகோடு மாநாடு : https://www.unicodeconference.org
2. உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் உணர்ச்சிக்குறிகள் :  http://blog.unicode.org/2019/10/the-most-frequent-emoji.html