கோலாலம்பூர்: மலாயா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போது துணைவேந்தருக்கு எதிராக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்திய மாணவர் வோங், தாம் எந்தவொரு இனத்தையும் குறிப்பிட்டு அந்த எதிர்ப்பினை நடத்தவில்லை என்று தெரிவித்தார்.
மாறாக, நாட்டில் இன நடைமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே வோங் அவ்வாறு நடந்து கொண்டதாகக் கூறினார். எனவே, வேறு இனங்களுக்காக மற்றொரு மாநாடு உருவாக்கப்பட்டால், அதுவும் எதிர்க்கப்படும் என்றார்.
“எங்கள் பல்கலைக்கழகம் சீன அல்லது இந்தியர் தன்மான காங்கிரஸை ஏற்பாடு செய்தாலும், நான் அதனை எதிர்ப்பேன்” என்று முன்னாள் மலாயா பல்கலைக்கழக இளைஞர் சங்கத் தலைவருமான அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அண்மையில், மலாயா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக வோங் எதிர்ப்பு அட்டையை ஏந்தி இன பேதத்திற்கு எதிராக முழக்கமிட்டார். மேலும், பல்கலைக்கழக துணைவேந்தர் அப்துல் ராகிம் ஹாஷிம் பதவியிலிருந்து விலகுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.