கோலாலம்பூர்: பெட்ரோல் மானியத் திட்டத்தின் (பிஎஸ்பி) கீழ் எரிபொருள் மானியத்திற்கு தகுதியான 2.9 மில்லியன் பெறுநர்களில், சுமார் 45,000 பேருக்கு வங்கிக் கணக்குகள் இல்லை என்று உள்நாட்டு வணிக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த நோக்கத்திற்காக, கணக்குகளைத் தொடங்க பெறுநர்களுக்கு உதவுவதற்காக தமது அமைச்சு உள்ளூர் வங்கிகளுடன் கலந்துரையாடும் என்று அவர் கூறினார்.
“உள்ளூர் வங்கிகளுடன் பூஜ்ஜிய இருப்பு கணக்குகளைத் திறக்க உதவ முடியுமா என்பது குறித்து அமைச்சகம் விவாதிக்கும். அவர்களுக்கு வங்கிக் கணக்கு எண் மட்டுமே தேவை. வங்கிகளின் ஒத்துழைப்பைப் பெற முடிந்தால் நன்றாக இருக்கும்” என்று அவர் நேற்று பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
வங்கியின் ஒத்துழைப்பு இருந்தால் உதவி வழங்குவதற்கு இலகுவாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பெறுநர்களின் கணக்குகளில் செலுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான முதல் கட்டணம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும்.
கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி 2020-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை நிதியமைச்சர் லிம் குவான் எங் அறிவிக்கையில், பிஎஸ்பி திட்டம் 2020-இல் தொடங்கி தீபகற்பத்தில் இரண்டு வகை தகுதிகளின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்றார்.