
கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள சாதாரண அதிகாரிகளின் சராசரி சம்பளம் உயர் அதிகாரிகளால் பெறப்படும் சம்பளத்துடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகவே வழங்கப்படுகிறது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசகர் முகமட் அப்துல் காலிட் கூறியுள்ளார்.
பணக்காரர்களைக் காட்டிலும், இந்த வகுப்பு மக்களே தங்கள் பணத்தை அதிகமாக செலவழித்து நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பவர்களாக இருப்பதால், இவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
“அரசாங்கத் தரவுகளின்படி, மற்ற நாடுகளை விட மிகக் குறைவான சம்பளம் இந்நாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. ஒரு சில தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளம் வழங்குகிறோம். குறிப்பாக, தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் உயர் நிர்வாகத்தினர் சராசரி ஊதியத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.
புள்ளிவிவரத் துறையின் கண்டுபிடிப்புகளின்படி, 2018-இல் மலேசியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) தொழிலாளர்கள் இழப்பீடு வழங்குவது 35.7 விழுக்காடாகும்.
சிங்கப்பூரில், இதே விகிதங்கள் 39.7 விழுக்காடாகும். வளர்ந்த நாடுகளில் இவ்விகிதங்கள் 50 முதல் 60 விழுக்காடுகள் அல்லது அதற்கும் மேற்பட்டவையாக இருக்கிறது.