வாஷிங்டன் – உலகம் முழுவதும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் முதல்நிலைத் தலைவராகக் கருதப்படும் அபு பாக்கர் அல் பக்டாடி அமெரிக்கப் படைகள் வட மேற்கு சிரியாவில் நேற்று சனிக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என அமெரிக்க அரசாங்கம் அறிவித்தது.
“அபு பாக்கர் கொல்லப்பட்டது ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு நேர்ந்த மிகப் பெரிய பின்னடைவாகும். காரணம், அவர் அதன் தலைவர் மட்டுமல்ல. அந்த இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் அவரும் ஒருவராவார். அந்த இயக்கத்தினரை ஊக்குவித்தவர் அவர்” என அமெரிக்காவின் தற்காப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் தெரிவித்தார்.
அமெரிக்கத் தாக்குதலை அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அங்கீகரித்தார் என்றும் கூறிய எஸ்பர் இனி ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை அணுக்கமாகக் கவனித்து வருவோம் என்றும் புதிய தலைவர்கள் உருவானால் அவர்களைக் குறிவைத்தும் தாக்குவோம் என்றும் எஸ்பர் கூறினார்.
அபு பாக்கர் ஒரு கோழையைப் போல் இறந்தார் என டிரம்பும் அறிவித்திருக்கிறார்.
அபு பாக்கரின் இடத்தை அமெரிக்கப் படைகள் முற்றுகையிட்டபோது, அவர் அமெரிக்கப் படைகளிடம் சரணடைய மறுத்துவிட்டதாகவும், அமெரிக்கத் தாக்குதலின்போது தான் அணிந்திருந்த குண்டுகள் இணைக்கப்பட்டிருந்த கவசத்தை வெடிக்கச் செய்து அபு பாக்கர் தற்கொலை செய்துகொண்டதாகவும் அமெரிக்காவின் தற்காப்பு அமைச்சர் விளக்கினார்.