Home One Line P1 விடுதலைப் புலிகள் விவகாரம் : நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டவர்கள் யார்? யார்? (#1 – ஏ.கலைமுகன்)

விடுதலைப் புலிகள் விவகாரம் : நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டவர்கள் யார்? யார்? (#1 – ஏ.கலைமுகன்)

725
0
SHARE
Ad

கோலாலம்பூர்- நேற்று செவ்வாய்க்கிழமை நாடு முழுமையிலும் விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 10 பேர் வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டனர்.

செலாயாங் நீதிமன்றத்தில் ஏ.கலைமுகன் (வயது 28)

செலாயாங் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் ஏ.கலைமுகன் என்ற 28 வயது நபர் மீது நேற்று செவ்வாய்க்கிழமை காலை குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன. கலைமுகன் பிகேஆர் கட்சியின் உறுப்பினருமாவார்.

கலைமுகன் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி விடுதலைப் புலிகள் தொடர்பில் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பழைய இரும்பு வியாபாரியான அவர் விடுதலைப் புலிகள் தொடர்பாக பொருட்கள் வைத்திருந்ததற்காக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

நீதிபதி மசியா ஜோரி முகமட் தாஜூடின் முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்ட அவரது வழக்கு சொஸ்மா சட்டத்தின் கீழ் வருவதால் உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்படும்.

ரவாங், புக்கிட் செந்தோசாவில் உள்ள இல்லம் ஒன்றில் அவர் விடுதலைப் புலிகள் தொடர்புடைய பொருட்களை வைத்திருந்ததற்காக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.

சிடி (compact disks – CD) குறுந்தட்டுகள், காணொளி குறுந்தட்டுகள், (விசிடி), விடுதலைப் புலிகள் தொடர்புடைய ஒட்டுத் தாள்கள் (ஸ்டிக்கர்) போன்றவை அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில் அடங்கும்.

குற்றவியல் பிரிவின் (Section 130JB (1)(a) கீழ் குற்றம் சாட்டப்பட்ட அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபாரதம் விதிக்கப்பட்டு, அவரிடம் இருந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்படலாம்.

அரசு தரப்பில் வழக்கை நடத்தும் ரொஹாய்சா அப்துல் ரஹ்மான், கலைமுகன் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதால், பிணை எதுவும் வழங்கப்படாது என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கலைமுகனைப் பிரதிநிதித்த வழக்கறிஞர் வி.யோகேஸ் தனது கட்சிக்காரருக்கு பிணை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது 65 வயது தந்தையைப் பராமரிக்க வேண்டி உள்ளது எனவும் வாதிட்டார். கலைமுகனின் தந்தை மாற்றுத் திறனாளி என்பதால் அவருக்கு சிறப்புக் கவனிப்பு தேவைப்படுவதாகவும் அவர் வாதிட்டார்.

எனினும், கலைமுகனுக்கு பிணை எதனையும் வழங்காத நீதிமன்றம் வழக்கை அடுத்த டிசம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அவர் தொடர்ந்து சிறையில் இருந்து வருவார்.