Home One Line P1 விடுதலைப் புலிகள் விவகாரம் : பினாங்கு நீதிமன்றத்தில் இருவர் – கோலகங்சாரில் இருவர் –...

விடுதலைப் புலிகள் விவகாரம் : பினாங்கு நீதிமன்றத்தில் இருவர் – கோலகங்சாரில் இருவர் – சிப்பாங்கில் ஒருவர்

570
0
SHARE
Ad

பட்டவொர்த் – நேற்று செவ்வாய்க்கிழமை நாடு முழுமையிலும் விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 10 பேர் வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்.

அவர்களில் இருவர் பினாங்கு பட்டவொர்த்திலுள்ள இருவேறு அமர்வு நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டனர்.

பட்டவொர்த் நீதிமன்றத்தில் பூமுகன்மற்றும் தனகராஜ்

பாதுகாப்புக் காவல் பணிபுரியும் 29 வயதான எம்.பூமுகன் விடுதலைப் புலிகள் தொடர்பான சில தரவுகளை தனது கைத்தொலைபேசியில், செபராங் பிறையில் உள்ள ஒரு லாரிப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி பதிவு செய்து வைத்திருந்ததற்காக பட்டவொர்த் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி நோர்ஹயாதி முகமட் யூனுஸ் முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்டார். அதே குற்றத்தை புக்கிட் மெர்தாஜமிலுள்ள ஓர் இல்லத்தில் அதே தினத்தில் புரிந்ததற்காக அவர் மீது மற்றொரு குற்றச்சாட்டும் கொண்டு வரப்பட்டது.

#TamilSchoolmychoice

இன்னொரு அமர்வு நீதிமன்றத்தில் ஒரு சேமிப்புக் கிடங்கு பொறுப்பாளரான 26 வயதான எஸ்.தனகராஜ் இதே போன்ற விடுதலைப் புலிகள் தொடர்பான விவகாரத்திற்காக குற்றம் சாட்டப்பட்டார்.

செபராங் பிறையிலுள்ள ஓர் அலுவலகத்தில் இந்தக் குற்றங்களை தனகராஜ் கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்த இரு நபர்களும் குற்றவியல் சட்டத்தின் கீழ் (Section 130JB (1)(a) of the Penal Code) குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் அதிகபட்ச சிறைத் தண்டனையும் அல்லது அபராதம் விதிக்கப்பட்டு அவர்கள் வைத்திருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்படலாம்.

இவர்கள் இருவருக்கும் டாக்டர் அகிலன் வழக்கறிஞராக செயல்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் பிணை வழங்கப்படவில்லை.

அவர்ளின் வழக்கு எதிர்வரும் டிசம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கோலகங்சாரில் இருவர் – அரவிந்தன், பாலமுருகன்

இதற்கிடையில் பேராக் மாநிலத்தின் கோலகங்சார் அமர்வு நீதிமன்றத்தில் ஒரு தொழில்நுட்பப் பணியாளரான எஸ்.அரவிந்தன் (வயது 27) மற்றும் வாடகை வாகன ஓட்டுநரான வி.பாலமுருகன் (வயது 37) ஆகிய இருவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை 2014 முதல் ஆதரித்து வந்திருப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டனர்.

கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி மாலையில் கோலகங்சார் நகர மன்ற மண்டபத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு ஆதரவு தந்ததற்காக அவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

குற்றவியல் பிரிவின் கீழ் (130J (1)(a) of the Penal Code) குற்றம் சாட்டப்படிருக்கும் இவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை அல்லது 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

இவர்களில் பாலமுருகன் மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கூடுதலாகக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. விடுதலைப் புலிகள் தொடர்பான தரவுகளை கைத்தொலைபேசியில் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி வைத்திருந்ததற்காக பாலமுருகன் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் (130JB(1)(a) and (b) of the Penal Code) கொண்டு வரப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.

ஜசெக நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான ஆர்.எஸ்.என்.ராயர் அரவிந்தனைப் பிரதிநிதிக்க, பாலமுருகனை பர்ஹான் பட்சில் மற்றும் மாத்யூஸ் ஜூட் ஆகிய வழக்கறிஞர்கள் பிரதிநிதித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தும் நீதிபதி பிணையை மறுத்து வழக்கு விசாரணையை எதிர்வரும் நவம்பர் 28-ஆம் தேதிக்கு நிர்ணயித்தார்.

பிணை விண்ணப்பம் மறுக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக ராயர் தெரிவித்துள்ளார்.

சிப்பாங் நீதிமன்றத்தில் சுந்தரம் ரெங்கன்

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தெலுக் பங்ளிமா காராங் வட்டாரத்தில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றின் ஆசிரியரான சுந்தரம் ரெங்கன் என்ற ரெங்கசாமி (வயது 52) விடுதலைப் புலிகள் விவகாரத்திற்காக சிப்பாங் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். தெலுக் பங்ளிமா காராங் வட்டாரத்திலுள்ள இல்லம் ஒன்றில் விடுதலைப் புலிகள் தொடர்பான பொருட்கள் வைத்திருந்ததற்காக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சுந்தரம், ஆங்கிலம் மற்றும் இயற்பியல் கற்பிக்கும் ஆசிரியராவார்.