கோலாலம்பூர் – ஒரு காலத்தில் ஒரே விமான நிறுவனமாக இயங்கி, பின்னர் மலேசியா ஏர்லைன்ஸ் என்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்றும் பிரிந்து, இரு பெரும் நிறுவனங்களாக உருவெடுத்து, போட்டித் தன்மையோடு செயல்பட்டு வரும் இந்த விமான நிறுவனங்கள் இரண்டும், பல்வேறு தரப்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
இதன் மூலம் தங்களுக்கிடையிலான நீண்டகால வணிகப் பரிமாற்றங்களை அந்த இரண்டு விமான நிறுவனங்களும் மறுஉறுதிப்படுத்திக் கொண்டுள்ளன.
சிங்கை, மலேசியா இடையிலான விமானப் போக்குவரத்து மூலம் கிடைக்கும் வருமானத்தை பகிர்ந்து கொள்வது, இணைந்து புதிய பயணத் தடங்களை மேற்கொள்வது, சுற்றுலாத் துறையை மேம்படுத்த இணைந்து விளம்பரங்களைச் செய்வது போன்ற பல அம்சங்கள் இந்த உடன்பாட்டில் இருப்பதாக அந்த இரு நிறுவனங்களும் இன்று புதன்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
இந்த உடன்பாடு சிங்கப்பூர் ஏர்லைன்சின் துணை நிறுவனங்களான சில்க் ஏர், ஸ்கூட் ஆகியவற்றையும், மலேசியா ஏர்லைன்சின் துணை நிறுவனமான பையர்பிளை விமான நிறுவனத்தையும் உள்ளடக்கியிருக்கிறது.
இனி சிங்கை – மலேசிய நகர்களுக்கு இடையிலான விமானப் போக்குவரத்து இந்தக் கூட்டு ஒப்பந்தத்தை அடிப்படையாக வைத்து நடத்தப்படும்.
இந்தப் புதிய ஒப்பந்தம் மூலம் பயனீட்டாளர்களுக்கு பல பயன்கள் ஏற்படும் என்றும் இருதரப்பும் தெரிவித்துள்ளன.