கோலாலம்பூர்: ரேபிட் டிரான்ஸிட் சிஸ்டம் (ஆர்டிஎஸ்) இணைப்புத் திட்டத்தைத் தொடர மலேசியா ஒப்புக் கொண்டாலும், ஜோகூர் படுகைப் பாலத்தில் ஏற்படும் நெரிசல் பிரச்சனையை தீர்க்க முடியாது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு நாடுகளையும் இணைக்க ஒரு புதிய பாலம் அமைப்பதே மலேசியா மிகச் சிறந்த நீண்டகால தீர்வாகக் காண்கிறது என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், 1926 முதல் மலேசியாவிலிருந்து ஒரே நிலையிலான தண்ணீர் மானியத்தை அனுபவித்து வருவதால் சிங்கப்பூர் நியாயமானதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். இப்புதிய பாலத்தைக் கட்டுவதில் சமரசம் செய்ய அது மறுத்துவிட்டது என்று அவர் தெரிவித்தார்.
“இந்த பிரச்சனைக்கு தீர்வு பாலம். நம்மால் பாலத்தை உருவாக்க முடியாது, ஏனென்றால் நம்முடன் உடன்பட சிங்கப்பூர் இணக்கம் காட்டவில்லை. ஆனால், நாம் இன்னும் 1,000 கேலன் தண்ணீரை ஒரு நிலையான விலையில் 1926-இல் விற்க ஒப்புக்கொண்டுள்ளோம்.”
“இதுதான் ஜோகூர் எதிர்கொண்டு வரும் பிரச்சனையாகும்.” என்று அவர் கூறினார்.
தற்போது ஆர்டிஎஸ் பாலத்தை கட்டுவதற்கு 1.77 பில்லியன் ரிங்கிட் பணத்தை அரசாங்கம் சேமிக்க இயலும் என்று பிரதமர் தெரிவித்தார். முன்பு, இதன் அசல் கட்டுமான செலவு 4.93 பில்லியனாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் மூல நீர் விற்பனையின் விலையை உயர்த்துவதற்கான மலேசியாவின் கோரிக்கைக்கு சிங்கப்பூர் சமரசம் செய்யும் என்று பிரதமர் எதிர்பார்க்கிறார்.
நீர் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அண்டை நாடு விரைவில் ஒரு புதிய தேதியை அறிவித்து உடன்படும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார்.